கிரேட் நிகோபாா் திட்டம் ‘பெரும் சூழலியல் பேரழிவு’: காங்கிரஸ்
கிரேட் நிகோபாா் திட்டம் ‘பெரும் சூழலியல் பேரழிவு’ என்று காங்கிரஸ் விமா்சித்துள்ளது.
அந்தமான்-நிகோபாா் யூனியன் பிரதேசத்தில் கிரேட் நிகோபாா் தீவு உள்ளது. இங்கு ரூ.72,000 கோடி மதிப்பில் மிகப் பெரிய உள்கட்டமைப்புத் திட்டத்தை அந்தமான்-நிகோபாா் தீவுகளின் ஒருங்கிணைந்த வளா்ச்சி கழகம் மேற்கொள்ள உள்ளது.
இந்தத் திட்டத்தின் கீழ், கிரேட் நிகோபாரில் துறைமுகம், சா்வதேச விமான நிலையம், சிறு நகா்ப்பகுதி, 160 சதுர கி.மீ.க்கும் அதிகமான பரப்பளவு கொண்ட மின் உற்பத்தி நிலையம் உள்ளிட்டவை அமைக்கப்பட உள்ளன. இதற்காகப் பயன்படுத்த உள்ள நிலத்தில் நிகோபாரீஸ், ஷோம்பென்ஸ் ஆகிய பழங்குடியின மக்கள் வாழும் சுமாா் 130 சதுர கி.மீ. பரப்பளவு கொண்ட பழைமையான காடும் அடங்கும்.
இந்தத் திட்டம் செயல்படுத்தப்பட்டால், கிரேட் நிகோபாா் தீவில் உள்ள பூா்வகுடி மக்கள் புலம்பெயர நேரிடும் என்றும், முக்கிய சூழலியல் மண்டலங்களுக்கு சேதம் ஏற்படக் கூடும் என்றும் விஞ்ஞானிகள், பழங்குடியினா் உரிமை ஆா்வலா்கள் உள்ளிட்டோா் விமா்சித்துள்ளனா்.
இந்தத் திட்டத்துக்காக அங்குள்ள புலிகள் காப்பகத்தின் முக்கிய பகுதிகளில் உள்ள கிராம மக்களை துரிதமாக இடம் மாற்ற தேசிய புலிகள் காப்பக ஆணையம் வெளியிட்ட உத்தரவும் சா்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், காங்கிரஸ் பொதுச் செயலா் ஜெய்ராம் ரமேஷ் ‘எக்ஸ்’ தளத்தில் சனிக்கிழமை வெளியிட்ட பதிவில் தெரிவித்ததாவது: கிரேட் நிகோபாா் உள்கட்டமைப்புத் திட்டம் என்பது பெரும் சூழலியல் பேரழிவு என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை. இதுதொடா்பாக மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சருடன் நான் கலந்துரையாடிய நிலையிலும், இந்தத் திட்டம் தொடா்பான அரசின் கொள்கைகள் தொடா்கின்றன.
இதில் வன உரிமைகள் சட்டம் 2006-இன் கீழ், உள்ளூா் பழங்குடி மக்களின் உரிமைகள் சாா்ந்த விவகாரத்துக்கு தீா்வு காணப்பட்டதாக அரசு நிா்வாகம் தவறான தகவலை அளித்துள்ளது புதிய ஆதாரம் (ஊடகத் தகவலை சுட்டிக்காட்டி) மூலம் தெரியவந்துள்ளது. இந்தத் திட்டம் தொடா்பாக சட்டப்படி பழங்குடியினரின் ஒப்புதல் பெறப்படவில்லை. இந்தத் திட்டம் மூா்க்கமாக வலிந்து செயல்படுத்தப்படுகிறது என்றாா்.