
உத்தரகண்ட் மாநிலத்தில், நள்ளிரவு முதல் பெய்து வரும் கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி 2 பேர் மாயமானதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சமோலி மாவட்டத்தின், தாராலி நகரத்தில் நேற்று (ஆக.22) நள்ளிரவு முதல் பெய்து வரும் கனமழையால், ஏற்பட்ட வெள்ளத்தால் அங்குள்ள வீடுகள் மற்றும் கடைகளின் உள்ளே வெள்ளநீர் புகுந்துள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து, தாராலி முழுவதும் வெள்ளத்தில் அடித்து வரப்பட்ட இடிபாடுகள் மற்றும் வாகனங்கள் சூழ்ந்து காணப்படும் நிலையில், சாக்வாரா மற்றும் செப்தோன் சந்தைப் பகுதியில் 2 பேர் மாயமானதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், சாக்வாரா பகுதியைச் சேர்ந்த கவிதா (வயது 20) உள்பட 2 பேர் மாயமானதால், அவர்களைத் தேடும் பணிகள் தற்போது தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தாராலியில் உள்ள முக்கிய கட்டமைப்புகள் அனைத்தும் வெள்ளத்தில் பலத்த சேதமடைந்துள்ளன. இதனால், மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.
இத்துடன், வெள்ளம் ஏற்பட்ட பகுதியில் மாநில மீட்புப் படைகள் உடனடியாக களமிறக்கப்பட்டன. ஆனால், அந்நகரத்தை இணைக்கும் கார்னாப்ரயாக் - குவால்டம் நெடுஞ்சாலையில் இடிபாடுகள் சூழ்ந்து முடங்கியுள்ளதால், மீட்புப் பணிகளை மேற்கொள்வதில் தாமதம் ஏற்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை தங்கவைப்பதற்கு மாவட்ட நிர்வாகம் சார்பில் நிவாரண முகாம்கள் தற்போது அமைக்கப்பட்டு வருகின்றன. மேலும், மூன்று மண்டலங்களில் உள்ள பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, உத்தரகாசியில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு மேகவெடிப்பால் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி, ஒருவர் பலியானதுடன் சுமார் 65 பேர் மாயமானது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க: மோடி அமைச்சரவையில் குற்றப் பின்னணி கொண்ட 39% பேர் மீது 130-ஆவது சட்டப் பிரிவு பாயுமா?
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.