
அனைத்து விஷயங்களிலும் பாரதிய ஜனதா கட்சி சொந்தம் கொண்டாட நினைப்பதாக சமாஜவாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் விமர்சித்துள்ளார்.
முதன்முதலில் விண்வெளிக்குச் சென்றவர் அனுமன் என முன்னாள் மத்திய அமைச்சரும் பாஜக எம்.பி.யுமான அனுராக் தாக்குர் பேசியதற்கு பதில் அளிக்கும் விதமாக அகிலேஷ் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
தேசிய விண்வெளி நாளையொட்டி, ஹிமாசலப் பிரதேசம் உனாவில் உள்ள பிஎம் ஸ்ரீ பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய அனுராக் தாக்குர், விண்வெளிக்குச் சென்ற முதல் வீரர் யார் என்ற கேள்வியைக் கேட்டார். பின்னர் மாணவர்களின் பல்வேறு பதில்களைக் கேட்ட பின்னர், அனுமன்தான் விண்வெளிக்குச் சென்ற முதல் வீரராக இருக்கலாம் எனக் கூறினார்.
இது தொடர்பாக லக்னெளவில் செய்தியாளர்களுடன் பேசிய அகிலேஷ் யாதவ், ''சர்வதேச விண்வெளி மையத்துக்குச் சென்ற முதல் இந்தியர் என்ற சாதனையை படைத்துள்ள சுபான்ஷு சுக்லாவுக்கு வாழ்த்து தெரிவித்துக் கொள்கிறேன். மிகச் சிறந்த சாதனையை அவர் செய்துள்ளார். இத்தனை ஆண்டுகளாக மேற்கொண்ட கடின உழைப்பு மற்றும் கடுமையான பயிற்சியின் மூலம் சுபான்ஷு இந்த சாதனையை நிகழ்த்தியுள்ளார்.
இந்திய நாட்டுக்கு இது மிகப்பெரிய பெருமை. தனிப்பட்ட முறையில் அவருக்கும் அவரின் குடும்பத்தாருக்கும் இது பெருமையான தருணம். அவரால் நாடும் பெருமை அடைகிறது. அவர் நாட்டின் சொத்தாக மாறியுள்ளார்'' எனக் குறிப்பிட்டார்.
மேலும், அனுராக் தாக்குரின் பெயரைக் குறிப்பிடாமல் தொடர்ந்து பாஜகவை விமர்சித்து அவர் பேசியதாவது, ''பாஜக அனைத்து விஷயங்களிலும் சொந்தம் கொண்டாட நினைக்கிறது. இப்போது, விண்வெளிக்குச் சென்ற முதல் வீரர் அனுமன் என சொந்தம் கொண்டாடுகிறது. ஆனால், நாம் என்றுமே கூறுவது என்னவென்றால், நம் தெய்வங்கள் அனைத்தும் வானத்தில் இருக்கின்றன என்பதுதான்'' என அகிலேஷ் தெரிவித்தார்.
இதையும் படிக்க | பஞ்சாபில் இலவச ரேஷனை நிறுத்த மத்திய அரசு சதி: பகவந்த் மான்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.