ஜி.எஸ்.டி. தடாலடி குறைப்பு? புதிய தகவல்கள்!

ஜிஎஸ்டி அதிரடியாகக் குறைக்கப்படவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளதைப் பற்றி...
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்.
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்.
Published on
Updated on
2 min read

பொருள்களுக்கான சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) அதிரடியாகக் குறைக்கப்படவுள்ளதாகத் தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இந்த வரி குறைப்பால், டிவி, ஏசி, கார் மற்றும் சிமென்ட் உள்ளிட்ட பொருள்களின் விலை கணிசமாகக் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தீபாவளியை முன்னிட்டு ஜிஎஸ்டி வரி குறைக்கப்படும் என்று சுதந்திர தின உரையில் பிரதமர் நரேந்திர மோடி அறிவித்திருந்தார்.

இதுதொடர்பாக பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சர்கள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதன்பிறகு, பல்வேறு மாநிலங்களின் நிதி அமைச்சர்களுடன் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆலோசனை நடத்தினார்.

வரி முறையை எளிமைப்படுத்தவும், பல்வேறு அடுக்குகளாக இருக்கும் வரி நிலையை ஒழுங்குபடுத்தவும் மத்திய அமைச்சரவை முடிவெடுத்துள்ளது.

மேலும், ஜிஎஸ்டி கட்டமைப்பில் தற்போது 5, 12, 18, 28 சதவிகிதம் என 4 அடுக்குகளாக வரிவிகிதங்கள் உள்ளன. இதனை 5 மற்றும் 18 சதவிகிதம் என இரண்டு அடுக்குகளாக மாற்ற மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

தில்லியில் வருகிற செப்டம்பர் 3, 4 ஆகிய தேதிகளில், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் ஜிஎஸ்டி கவுன்சிலின் 56-வது கூட்டம் நடைபெற உள்ளது. இந்தக் கூட்டத்தில் ஜிஎஸ்டி வரி விகிதங்களை குறைப்பது குறித்து முடிவு எடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தீபாவளி பண்டிக்கைக்கு முன்னதாகவே, விரைவில் இந்த ஜிஎஸ்டி மறுசீரமைப்பு செயல்பாட்டிற்கு வரும் என்றும், பொதுமக்களுக்கு நல்ல விஷயமாக அமைந்தாலும், இந்த நடவடிக்கையால் மத்திய அரசுக்குச் சுமார் ரூ.45,000 கோடி வருவாய் இழப்பு ஏற்படும் என்றும் பொருளாதார வல்லுநர்கள் கணித்துள்ளனர்.

சுதந்திர தின உரையின் போது நாட்டு மக்களுக்கு இரட்டை போனஸ் இருப்பதாக பிரதமர் மோடி தெரிவித்திருந்தார். அதன்படி, வருகிற அக்டோபர் 2 ஆம் தேதி, காந்தி ஜெயந்தி மற்றும் விஜயதசமி பண்டிகையின்போது ஜிஎஸ்டி புதிய வரிவிதிப்பு குறித்த அதிகாரபூர்வ தகவல்கள் வெளியாகும் என நம்பத்தகுந்த வட்டாரங்கள் தகவல்கள் தெரிவிக்கின்றன.

சிமென்ட், சலூன் மற்றும் பியூட்டி பார்லர்கள் போன்ற மக்கள் அதிகமாக பயன்படுத்தும் மற்றும் தனிநபர் ஆயுள், சுகாதார காப்பீட்டுத் திட்டங்கள் உள்ளிட்ட பல பொருள்களின் மீதான வரிகளைக் குறைக்கும் திட்டம் குறித்து ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் விவாதிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.

இந்த வரி சீர்திருத்தத்தால், பழங்கள், உணவுப் பொருள்கள், காய்கறி, மருந்துகள், ஏசி, ஃபிரிட்ஜ், வாஷிங் மெஷின், தொலைக்காட்சிப் பெட்டி, ஜவுளி, சிமென்ட் உள்பட பல்வேறு பொருள்களின் விலை கணிசமாக குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

காப்பீட்டுத் திட்டங்களை 5 சதவிகிதத்திலிருந்து வரிவிலக்கு அளிக்கவும், அத்தியாவசியப் பொருள்களுக்கு 18 சதவிகிதத்திலிருந்து 5 சதவிகிதமாகக் குறைக்கவும், சிமென்ட் மீதான வரியை 28 சதவிகிதத்திலிருந்து 18 சதவிகிதமாகக் குறைக்கவும், அதிகளவில் பயன்படுத்தப்படும் பல்வேறு அடுக்குகளில் இருக்கும் ஏசி, டிவி, உள்ளிட்ட பொருள்களை ஒரே 18 சதவிகித அடுக்குக்குள் கொண்டுவரவும் முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஆட்டோமொபைல்ஸில் 4 மீட்டர் வரை நீளம் கொண்ட சிறிய கார்களுக்கு 18 சதவிகித வரியும், பெரிய கார்களுக்கு 40 சதவிகித வரியும் விதிக்கப்படும் என்று கூறப்படுகிறது.

இது தற்போதைய 50 சதவிகித (28 சதவிகித ஜிஎஸ்டி மற்றும் 22 சதவிகித செஸ்) வரியை விடக் குறைவானது என்பதால் கார் பிரியர்களும் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

Summary

All food and textile items may be moved into 5% GST slab

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com