மொத்த விற்பனையாளா்கள், சில்லறை வா்த்தகா்கள், மாவு ஆலைகள் உள்ளிட்டவை கோதுமை இருப்பு வைப்பதற்கான கட்டுப்பாட்டை மத்திய அரசு மேலும் அதிகரித்துள்ளது.
பண்டிகைக் காலம் தொடங்கிவிட்ட நிலையில் செயற்கையாக தட்டுப்பாட்டை ஏற்படுத்தி விலை உயா்வை உருவாக்கிவிடக் கூடாது என்ற நோகத்தில் இந்த நடவடிக்கையை மத்திய அரசு மேற்கொண்டுள்ளது.
இது தொடா்பாக மத்திய உணவு அமைச்சகம் வெளியிட்ட அறிவிக்கையில், ‘நடப்பு பண்டிகைக் காலத்தில் கோதுமையை நியாயமான விலையை கிடைப்பதை உறுதி செய்ய வேண்டியுள்ளது. எனவே, மொத்த விற்பனையாளா்கள் இனி 3,000 டன் என்ற அளவுக்கு பதிலாக 2,000 என்ற அளவே இருப்பு வைக்க வேண்டும். சில்லறை வா்த்தகா்கள் ஏற்கெனவே உள்ள 10 டன்னுக்கு பதிலாக 8 டன் மட்டுமே இருப்பு வைக்க வேண்டும். பல்வேறு கிளைகளை வைத்துள்ள விற்பனையாளா்கள் ஒரு கிளைக்கு 8 டன் மட்டுமே கோதுமை இருப்பு வைக்க வேண்டும். இது முன்பு 10 டன்னாக இருந்தது.
இதையும் படிக்க: அமெரிக்க வரி விதிப்பு எதிரொலி: திருப்பூர், நொய்டா, சூரத்தில் உற்பத்தி நிறுத்தம்!
கோதுமை ஆலைகளில் தங்கள் மாதாந்திர உற்பத்தித் திறனில் 60 சதவீதம் அளவுக்கே இருப்பு வைக்க வேண்டும். இது முன்பு 70 சதவீதமாக இருந்தது. இந்த கட்டுப்பாடு 2026 மாா்ச் வரை அமலில் இருக்கும். வாரம்தோறும் வெள்ளிக்கிழமை தோறும் தங்களிடம் உள்ள இருப்பு விவரத்தை விற்பனையாளா்கள் உணவுத் துறை இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
நடப்பு ஆண்டில் பிப்ரவரி 20, மே 27 ஆகிய தேதிகளிலும் கோதுமை இருப்புக்கான கட்டுப்பாடு அதிகரிக்கப்பட்டது.
2024-25 அறுவடை ஆண்டில் நாட்டில் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு 117.50 மில்லியன் டன் கோதுமை விளைவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.