
வெளிநாடுகளில் இருந்து பருத்தியை சுங்க வரி இல்லாமல் இறக்குமதி செய்வதற்கான காலஅவகாசத்தை டிசம்பர் 31 வரை மத்திய அரசு நீட்டித்துள்ளது.
வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பருத்திக்கு ஏற்கெனவே 11 சதவீத இறக்குமதி வரி விதிக்கப்பட்டு வந்தது. அதுதவிர, வேளாண் உள்கட்டமைப்பு மற்றும் வளர்ச்சி வரியும் விதிக்கப்பட்டது.
இந்த நிலையில், சுங்க வரி இல்லாமல் பருத்தியை இறக்குமதி செய்வதற்கான அறிவிக்கையை மத்திய நிதி அமைச்சகம் ஆகஸ்ட் 18-இல் வெளியிட்டது. இந்தச் சலுகை ஆகஸ்ட் 19 முதல் செப்டம்பர் 30-ஆம் தேதி வரை அமலில் இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதனிடையே, ரஷியாவிடம் இருந்து கச்சா எண்ணெயை வாங்குவதற்கு அபராதம் விதிக்கும் வகையில் இந்தியா மீது அமெரிக்கா விதித்த கூடுதல் இறக்குமதி வரி புதன்கிழமை முதல் அமலுக்கு வந்துள்ளது.
இதையடுத்து, டிசம்பர் 31, 2025 வரை சுங்க வரி இல்லாமல் பருத்தியை இறக்குமதி செய்வதற்கான அறிவிக்கையை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.
ஜவுளித் துறை உள்பட இந்திய ஏற்றுமதியாளர்கள் அமெரிக்கா விதித்துள்ள கூடுதல் இறக்குமதி வரியை எதிர்கொண்டுள்ள சூழ்நிலையில், பருத்திக்கான இறக்குமதி வரியை இந்தியா நீக்கியுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.