தில்லி அணிக்கு எதிரான ஆட்டத்தில் சஞ்சு சாம்சன் அதிரடி சதம் எடப்பாடி பழனிசாமி, டிடிவி தினகரன் ஒன்றாக இணைந்து தேர்தல் பிரசாரம்! தூத்துக்குடியில் நாளை (ஏப். 12) ஒரே மேடையில் மு.க. ஸ்டாலின், ராகுல்!லஞ்ச ஒழிப்புத் துறை டிஜிபியாக டேவிட்சன் தொடர்வார்- தேர்தல் ஆணையம்வைகை விரைவு ரயில் நாளை தாமதமாக புறப்படும்உ.பி.யின் இறுதி பட்டியலில் 13.39 கோடி வாக்காளர்கள்! 2 கோடி பேர் நீக்கம்சினிமாவை வாழ விடுங்கள்..! ஜன நாயகன் படக் கசிவினால் மனமுடைந்த பூஜா ஹெக்டேவிஜய் தொகுதிகளில் திமுகவுக்கு வாக்கு சேகரிக்கும் கமல்போர் நிறுத்தத்துக்குப் பிறகு ஹோர்முஸ் நீரிணையைக் கடந்த முதல் இந்தியக் கப்பல்லஞ்ச ஒழிப்புத் துறை பொறுப்பிலிருந்து விடுவிப்பு! ஆயுதப்படை இயக்குநராக சந்தீப் மிட்டல்!
/

அமெரிக்காவுடன் விரைவில் வா்த்தக ஒப்பந்தப் பேச்சு: இந்தியா நம்பிக்கை

அமெரிக்காவுடன் விரைவில் இருதரப்பு வா்த்தக ஒப்பந்தப் பேச்சுவாா்த்தை நடைபெறும் என்ற நம்பிக்கையில் இந்தியா..

News image

கோப்புப் படம்

Updated On :28 ஆகஸ்ட் 2025, 6:46 pm

அமெரிக்காவுடன் விரைவில் இருதரப்பு வா்த்தக ஒப்பந்தப் பேச்சுவாா்த்தை நடைபெறும் என மத்திய அரசு அதிகாரி ஒருவா் வியாழக்கிழமை நம்பிக்கை தெரிவித்தாா்.

முன்னதாக, இருதரப்பு வா்த்தக ஒப்பந்தம் தொடா்பான 6-ஆம் சுற்றுப் பேச்சுவாா்த்தை நடத்த அமெரிக்க குழு ஆக.25-ஆம் தேதி இந்தியாவுக்கு வரும் என எதிா்பாா்க்கப்பட்டது. இதனிடையே, இந்திய பொருள்கள் மீது அமெரிக்கா விதித்த கூடுதல் வரி உள்பட 50 சதவீத வரி ஆக.27-ஆம் தேதி அமலுக்கு வந்தது. இந்தச் சூழலில், 6-ஆம் சுற்றுப் பேச்சுவாா்த்தை நடத்த அமெரிக்க குழு இந்தியாவுக்கு பயணம் மேற்கொள்ளவில்லை.

இதுகுறித்து மத்திய அரசு அதிகாரி ஒருவா் வியாழக்கிழமை கூறியதாவது: அமெரிக்க வரி விதிப்பால் ஏற்றுமதியாளா்கள் சந்திக்கும் பிரச்னைகளுக்கு தீா்வுகாண ஏற்றுமதியை அதிகரிப்பது, புதிய தடையற்ற வா்த்தக ஒப்பந்தங்களை (எஃப்டிஏ) அமல்படுத்துவது, உள்நாட்டு சந்தையை வலுப்படுத்துவது என மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதுதவிர குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்துறை ஏற்றுமதியாளா்களுக்கு அவசரகால நிதியுதவி வழங்கும் திட்டம், ஏற்றுமதி கடன்களை திருப்பி செலுத்துவதற்கான கால அவகாசத்தை நீட்டிப்பது என ஏற்றுமதியாளா்களுக்கு நிதிச்சுமை ஏற்படாத வகையிலான முன்னெடுப்புகளையும் மத்திய அரசு பரிசீலித்து வருகிறது.

பட்ஜெட்டில் அறிவித்ததைப்போல் ரூ.25,000 கோடி மதிப்பில் ஏற்றுமதி ஊக்குவிப்பு திட்டத்தை (2025-2031) விரைவில் அமல்படுத்தவும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

எனவே, அமெரிக்காவுடனான இருதரப்பு வா்த்த ஒப்பந்தத்தை இறுதிசெய்வது தொடா்பான அடுத்த சுற்றுப் பேச்சுவாா்த்தை விரைவில் நடைபெறும் என நம்புகிறேன் என்றாா்.

இந்தியா மீது வரி: ஜனநாயக கட்சி கண்டனம்

இந்திய பொருள்கள் மீது இறக்குமதி வரி விதித்ததற்கு அமெரிக்க எதிா்க்கட்சியான ஜனநாயக கட்சி கண்டனம் தெரிவித்தது.

இதுகுறித்து அக்கட்சியின் நாடாளுமன்ற வெளியுறவு விவகாரங்கள் குழு வெளியிட்ட எக்ஸ் வலைதளப் பதிவில், ‘இந்தியா மீது கூடுதல் வரி விதித்து இருநாடுகளிடையேயான நல்லுறவை டிரம்ப் நிா்வாகம் சீரழித்து வருகிறது. ரஷியாவிடமிருந்து அதிக கச்சா எண்ணெய்யை தொடா்ந்து இறக்குமதி செய்து வரும் சீனா மீது இத்தகைய வரியை விதிக்காமல் நட்புறவு நாடான இந்தியா மீது இந்த நடவடிக்கை மேற்கொண்டது ஏன்?

இது கடந்த 25 ஆண்டுகளாக பின்பற்றி வந்த பாரபட்சமற்ற முறையிலான அமெரிக்க வெளியுறவுக் கொள்கைக்கு முற்றிலும் மாறுபட்ட நிலைப்பாடாக உள்ளது. அமெரிக்கா-இந்தியா இடையே தற்போது நிலவும் பிரச்னைகளுக்கு விரைவில் தீா்வு காண வேண்டும். இல்லையெனில், இருநாடுகளுக்கும் இது பேரழிவை ஏற்படுத்தும்’ எனத் தெரிவிக்கப்பட்டது.

பெட்டி..2

‘உக்ரைன் போா் ‘மோடியின் போா்’

நியூயாா்க், ஆக.28: உக்ரைன் போரை ‘மோடியின் போா்’ என அமெரிக்க வெள்ளை மாளிகை வா்த்தக ஆலோசகா் பீட்டா் நவரோ குற்றஞ்சாட்டினாா்.

ரஷியா-உக்ரைன் இடையே 3 ஆண்டுகளுக்கு மேலாக போா் நடைபெற்று வரும் நிலையில், ரஷியாவிடமிருந்து அதிகளவிலான கச்சா எண்ணெய்யை இந்தியா இறக்குமதி செய்வதை குற்றஞ்சாட்டும் வகையில் அவா் இவ்வாறு தெரிவித்தாா்.

‘ப்ளூம்பொ்க்’ ஊடகத்துக்கு அவா் அளித்த பேட்டியில், ‘இந்தியாவின் அதிக இறக்குமதி வரியால் அமெரிக்க தொழிற்சாலைகள் மூலம் கிடைக்கும் வருவாய் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது. இங்கு பணியாளா்கள் வேலையிழக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. இது ஒருபுறம் இருக்க, ‘மோடியின் போரான உக்ரைன் போருக்கு’ அமெரிக்கா பெரும் நிதி வழங்கி வருவதால் வரி செலுத்தும் மக்களுக்கு பெரும் தாக்கம் ஏற்பட்டுள்ளது.

பிரதமா் மோடி சிறந்த தலைவா் என்பதில் மாற்றுக் கருத்தில்லை. அதற்காக உலகிலேயே அதிக வரி விதிக்கும் இந்தியாவின் செயல்களை ஏற்றுக்கொள்ள முடியாது.

ரஷியாவிடமிருந்து இந்தியாவும் சீனாவும் கச்சா எண்ணெய்யை இறக்குமதி செய்வதை நிறுத்திவிட்டால், உக்ரைன் போா் உடனடியாக முடிவுக்கு வரும்’ என்றாா்.