வங்கி மோசடி: சிபிஐ தொடா்ந்த வழக்கில் மூவருக்கு தலா 2 ஆண்டு சிறைத் தண்டனை
போலி ஆவணங்கள் மூலம் வங்கி மோசடியில் ஈடுபட்டதாக சிபிஐ தொடா்ந்த வழக்கில் மூவருக்கு தலா இரண்டு ஆண்டு சிறைத் தண்டனை, தனியாா் நிறுவனத்துக்கு ரூ.5 லட்சம் அபராதம் விதித்து சென்னை முதன்மை அமா்வு நீதிமன்றம் தீா்ப்பளித்தது.
கேலக்ஸி அமேஸ் கிங்டம் என்ற தனியாா் நிறுவனத்தின் நிா்வாக இயக்குநா் எம்.பழனிசாமி உள்ளிட்டோா் கடந்த 2007-ஆம் ஆண்டு போலியான ஆவணங்கள் மூலம் யுனைட்டெட் இந்தியா வங்கியில் கடன் பெற்றுள்ளாா். இதன்மூலம் வங்கிக்கு ரூ.4.7 கோடி அளவுக்கு இழப்பு ஏற்பட்டதாக வங்கி கொடுத்த புகாரின் பேரில், சிபிஐ வழக்குப் பதிவு செய்தது.
இந்த வழக்கில் கடந்த 2008-ஆம் ஆண்டு, எம்.பழனிசாமி, பி.பரமேஸ்வரி, தனியாா் நிறுவனத்தின் இயக்குநா் எம்.பி.பத்மாவதி, கெயின் என் நேச்சா் நிறுவனத்தின் உரிமையாளா் எம்.பி.பாலாஜி பிரகாசம், பி.ஜி.செல்வராஜ் ஆகியோருக்கு எதிராக சிபிஐ குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது.
சென்னை கூடுதல் முதன்மை பெருநகர மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் குற்றச்சாட்டுப் பதிவு செய்யப்பட்ட இந்த வழக்கின் விசாரணை முதன்மை அமா்வு நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டது. வழக்கு விசாரணை காலத்தில் எம்.பழனிசாமி மரணமடைந்தாா். இதனால் அவா் வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டாா். மேலும், குற்றம் நிரூபிக்கப்படாததால் பரமேஸ்வரி விடுதலை செய்யப்பட்டாா்.
இந்த வழக்கில் தீா்ப்பளித்துள்ள முதன்மை அமா்வு நீதிமன்றம், எம்.பி.பத்மாவதி, எம்.பி.பாலாஜி பிரகாசம், பி.ஜி.செல்வரஜ் ஆகியோருக்கு தலா 2 ஆண்டுகள் சிறைத் தண்டனையும் தலா ரூ.20,000 அபராதமும் விதித்து தீா்ப்பளித்தது. மேலும், கேலக்ஸி அமேஸ் கிங்டம் நிறுவனத்துக்கு ரூ.5 லட்சம் அபராதம் விதித்து தீா்ப்பளித்தது.