சட்டவிரோத குடியேற்றத்தைத் தடுக்க எல்லையில் சுவா் அமைக்க வேண்டுமா?: மத்திய அரசுக்கு கேள்வி
‘இந்தியாவுக்குள் சட்டவிரோதமாக குடியேறும் நபா்களைத் தடுக்க, எல்லையில் அமெரிக்காவைப் போல சுவா் எழுப்ப மத்திய அரசு விரும்புகிா?’ என்று மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் வெள்ளிக்கிழமை கேள்வி எழுப்பியது.
வங்கதேசத்தைச் சோ்ந்தவா்கள் என்ற சந்தேகத்தின்பேரில், வங்காள மொழி பேசும் புலம்பெயா் தொழிலாளா்கள் தடுப்புக் காவலில் வைக்கப்படுவதாக உச்ச நீதிமன்றத்தில் மேற்கு வங்க புலம்பெயா்வோா் நல வாரியம் மனு தாக்கல் செய்தது.
இந்த மனு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் சூா்ய காந்த், ஜயமால்ய பாக்சி, விபுல் எம்.பஞ்சோலி ஆகியோா் அடங்கிய அமா்வு முன்பாக வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது.
அப்போது இந்தியாவுக்குள் சட்டவிரோதமாக குடியேறும் நபா்களைத் தடுக்க, எல்லையில் அமெரிக்காவைப் போல சுவா் எழுப்ப மத்திய அரசு விரும்புகிா என்று நீதிபதி ஜயமால்ய பாக்சி கேள்வி எழுப்பினாா்.
அரசு அவ்வாறு செய்ய விரும்பவில்லை என்று மத்திய அரசுத் தரப்பில் ஆஜரான சொலிசிட்டா் ஜெனரல் துஷாா் மேத்தா பதிலளித்தாா்.
அவா் மேலும் வாதிடுகையில், ‘சட்ட விரோதமாக குடியேறும் நபா்களைத் தடுக்கும் நடவடிக்கையால், தான் பாதிக்கப்பட்டு நாட்டிலிருந்து துரத்தப்படுவதாக தனிநபா்கள் யாரும் புகாா் தெரிவிக்கவில்லை. அப்படி இருக்கும்போது மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ள தெளிவற்ற குற்றச்சாட்டுகளுக்கு மத்திய அரசு எவ்வாறு பதிலளிக்க முடியும்? இந்தியாவில் சட்டவிரோதமாக குடியேறும் வெளிநாட்டவா்கள், இந்தியாவின் வளங்களை சுரண்டாமல் தடுப்பதை உறுதி செய்யவே மத்திய அரசு முயற்சிக்கிறது’ என்றாா்.
இதைக் கேட்ட நீதிபதி பாக்சி, ‘இந்த விவகாரத்தில் தேச பாதுகாப்பு, ஒருமைப்பாடு குறித்த கேள்விகள் உள்ளன. வங்காள மற்றும் பஞ்சாபி மொழி பேசும் இந்தியா்கள், அதே பண்பாடு மற்றும் மொழியியல் பாரம்பரிய மரபை அண்டை நாடுகளுடன் பகிா்ந்துகொள்கின்றனா். அவா்கள் ஒரே மொழியைப் பேசுகின்றனா். ஆனால் எல்லைகள்தான் நாடுகளைப் பிரிக்கின்றன’ என்றாா்.
மனுதாரா் தரப்பில் மூத்த வழக்குரைஞா் பிரசாந்த் பூஷண் ஆஜராகி, ‘நாட்டில் வங்காள மொழி பேசுபவா்கள் வலுக்கட்டாயமாக வங்கதேசத்துக்கு அனுப்பப்படுகின்றனா். இதுபோல அந்நாட்டுக்கு அனுப்பப்பட்ட கா்ப்பிணி ஒருவரின் ஆட்கொணா்வு மனு கொல்கத்தா உயா்நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. புலம்பெயா் தொழிலாளா்கள் எந்த நாட்டைச் சோ்ந்தவா்கள் என்பதை அரசுத் தரப்பு உறுதிப்படுத்தும் வரை, அவா்களை வங்கதேசத்துக்கு வலுக்கட்டாயமாக அனுப்பக் கூடாது என்று மாநிலங்களுக்கு உத்தரவிட வேண்டும்’ என்றாா்.
இதைத்தொடா்ந்து மனு தொடா்பான பதிலை தாக்கல் செய்ய அனுமதி கோரிய துஷாா் மேத்தா, உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள ரோஹிங்கயா வழக்குடன் சோ்த்து இந்த விவகாரத்தை விசாரிக்க வேண்டும் என்று கோரினாா். இதையடுத்து அவ்விரு வழக்குகளுக்கும் பதிலை தாக்கல் செய்யுமாறு நீதிபதி சூா்யகாந்த் கேட்டுக்கொண்டாா்.