
பஞ்சாப் மாநிலத்தில் வெள்ளம் பாதித்த பகுதிகளை பார்வையிடச் சென்ற அமைச்சர்கள், அப்போது, தங்களது சொகுசுக் கப்பல் பயண அனுபவங்களைப் பகிர்ந்துகொண்ட விடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகியிருக்கிறது.
சுமார் 27 வினாடிகள் ஓடும் அந்த விடியோவில், ஸ்வீடன் மற்றும் கோவாவில் உள்ள சொகுசு கப்பல்களில் பயணித்தபோது ஏற்பட்ட அனுபவங்களை, அமைச்சர்கள் ருசிகரமாகப் பகிர்ந்து கொண்டிருக்கிறார்கள்.
டார்ன் டாரன் மற்றும் ஹரிகே இடையே வெள்ள பாதிப்புகளை படகில் சென்று பார்வையிட்டு, நிவாரண உதவிகளை அறிவிக்க வேண்டிய அமைச்சர்களின் பேச்சு, சமூக வலைத்தளங்களில் வைரலாகி, பேசுபொருளாகியிருக்கிறது.
பஞ்சாப் மாநில அமைச்சர்கள் ஹர்பஜன் சிங், லலித் சிங், பரிந்தர் குமார் கோயல் ஆகியோர் ஒரு படகில், வெள்ளம் பாதித்த பகுதிகளை ஆய்வு செய்து, நிவாரணப் பணிகளை முடுக்கிவிடுவது குறித்தும் பார்வையிடச் சென்று கொண்டிருந்தனர்.
சுற்றிலும் தண்ணீருக்கு இடையே படகில் சென்றபோது அமைச்சர்களுக்கு, சுவிட்சர்லாந்து சொகுசுக் கப்பலில் பயணித்த நினைவு வந்துவிட்டது, அது பற்றி அமைச்சர்கள் பேசிக் கொண்டிருந்ததை அங்கிருந்த யாரோ விடியோ பதிவு செய்து அதனை சமூக வலைத்தளத்தில் பதிவேற்றியும் விட்டார்.
அந்த விடியோவில், அமைச்சர்கள், ஸ்வீடன் நாட்டுக்கு சுற்றுலா சென்றபோது, அங்கிருந்த மிகப்பெரிய சொகுசுக் கப்பலில் பயணித்தது பற்றியும், அங்கிருந்த உணவகங்கள் உள்ளிட்டவை பற்றியும் பேசிக் கொண்டிருந்தனர். அப்போது மற்றொரு அமைச்சர், அதுபோன்ற ஒரு சொகுசுக் கப்பல் கோவாவிலும் இருக்கிறது என்று குறிப்பிட்டார்.
வெள்ளத்தால் சூழப்பட்டு ஒரு டம்ளர் தண்ணீருக்காக பஞ்சாப் மக்கள் தவித்துக் கொண்டிருக்கும்போது, அமைச்சர்களுக்கு அவர்களது பொற்காலங்கள்தான் நினைவுக்கு வருகிறதோ என்று கருத்துகளைக் கொட்டி வருகிறார்கள் இந்த விடியோவைப் பார்க்கும் சமூக வலைத்தள மக்கள்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.