
அரசுமுறைப் பயணமாக ஜப்பான் சென்றிருந்த பிரதமர் நரேந்திர மோடி, ஷாங்காய் கூட்டுறவு அமைப்பின் கூட்டத்தில் பங்கேற்க, சீனா புறப்பட்டுச் சென்றார்.
ஜப்பானிலிருந்து புறப்பட்ட பிரதமர் நரேந்திர மோடி, தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் ஜப்பான் பிரதமருக்கு நன்றி தெரிவித்துக் கொண்டிருப்பதோடு, இந்த பயண அனுபவம் என்றும் நினைவில் இருக்கும் என்றும், இந்த பயணத்தின் மூலம் ஏற்பட்ட ஒப்பந்தங்களால், இரு நாட்டு மக்களும் பயனடைவார்கள் என்றும் குறிப்பிட்டு, விடியோ ஒன்றையும் இணைத்துள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடியின் ஜப்பான் பயணத்தின்போது, இரு நாடுகளிடையே பல்வேறு துறை சாா்ந்த 13 ஒப்பந்தங்கள் கையொப்பமாகின. பொருளாதார பாதுகாப்பு கட்டமைப்பு முதல் பாதுகாப்புத் துறைகளில் தடையற்ற விநியோக சங்கிலியை ஊக்குவிப்பது வரையிலான பல்வேறு உடன்பாடுகள் கையெழுத்தானதாகக் கூறப்படுகிறது.
செமிகன்டக்டா்கள், தூய்மை எரிசக்தி, தொலைத்தொடா்பு, மருந்து உற்பத்தி, அரியவகை கனிமங்கள் உற்பத்தி, புது மற்றும் வளா்ந்து வரும் தொழில்நுட்பம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் ஒத்துழைப்பை வலுப்படுத்துவதற்கான உடன்பாடும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.
அது மட்டுமல்லாமல், இந்தியாவில் அடுத்த 10 ஆண்டுகளில் ரூ.6 லட்சம் கோடியை (10 டிரில்லியன் யென்) முதலீடு செய்ய ஜப்பான் இலக்கு நிா்ணயித்துள்ளதும், பாதுகாப்புத் துறை, கடல்சாா் பாதுகாப்பு உள்ளிட்ட துறைகளிலும் இருதரப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்த தீா்மானிக்கப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.
ஜப்பான் தலைநகா் டோக்கியோவில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற இந்தியா-ஜப்பான் வா்த்தக மாநாட்டில் ஜப்பான் பிரதமா் ஷிகேரு இஷிபாவுடனான பிரதமர் நரேந்திர மோடி வா்த்தக பேச்சுவாா்த்தை நடத்தினார். அதன்பிறகு இருதரப்பு ஒப்பந்தங்கள் குறித்து செய்தியாளர்களிடம் தெரிவிக்கப்பட்டது.
மேலும், டோக்யோவிலிருந்து பிரதமர் மோடி, ஜப்பான் பிரதமருடன் புல்லட் ரயிலில் பயணித்தார்.
இன்று ஜப்பான் பயணத்தை நிறைவு செய்துகொண்டு சீனா புறப்பட்டுள்ளார் பிரதமர் மோடி. டோக்கியோவிலிருந்து சனிக்கிழமை சீனா செல்லும் பிரதமா் மோடி அந்நாட்டு அதிபா் ஷி ஜின்பிங்கை ஆக. 31-ஆம் தேதி சந்தித்துப் பேசுகிறாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.