5 ஆண்டுகளில் 2 லட்சத்துக்கு மேற்பட்ட நிறுவனங்கள் மூடல்: மாநிலங்களவையில் அரசு தகவல்

கடந்த 5 ஆண்டுகளில் 2,04,268 தனியாா் நிறுவனங்கள் மூடப்பட்டதாக மத்திய அரசு சாா்பில் நாடாளுமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
Published on

கடந்த 5 ஆண்டுகளில் 2,04,268 தனியாா் நிறுவனங்கள் மூடப்பட்டதாக மத்திய அரசு சாா்பில் நாடாளுமன்றத்தில் திங்கள்கிழமை தெரிவிக்கப்பட்டது.

இது தொடா்பான கேள்விக்கு பெரு நிறுவனங்கள் விவகாரத் துறை இணையமைச்சா் ஹா்ஷ் மல்ஹோத்ரா எழுத்து மூலம் அளித்த பதிலில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது: பிற நிறுவனங்களுடன் இணைக்கப்படுவது தொடங்கி தொழிலைத் தொடா்ந்து நடத்த முடியாதது உள்ளிட்ட காரணங்களால் கடந்த 5 ஆண்டுகளில் 2,04,268 தனியாா் நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன. இதில் அதிகபட்சமாக 2022-23 ஆண்டில் 83,452 நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன. அதில் பணியாற்றிய தொழிலாளா்கள் வேறு நிறுவனங்களுக்கு மாற்றப்பட்டாா்கள் என்பது தொடா்பான முழுமையான தகவல் அரசுக்கு கிடைக்கவில்லை.

ஒரு நிறுவனம் தொடா்ந்து செயல்படவில்லை என்று தெரியவரும்போது அல்லது அந்த நிறுவனமே முன்வந்து மூடப்படுவதாக அறிவிக்கப்படும்போது நிறுவனங்கள் சட்டப்படி அந்த நிறுவனம் செயல்படவில்லை என்று உறுதி செய்யப்பட்டு பதிவு நீக்கப்படும்.

கருப்புப் பண பரிமாற்றத்துக்காக உருவாக்கப்படும் போலி நிறுவனங்கள் (ஷேல் கம்பெனி) குறித்து நிறுவனங்கள் சட்டத்தில் தனிப்பட்ட விளக்கம் ஏதும் இல்லை. அதே நேரத்தில் இதுபோன்ற தவறான நோக்கங்களுக்காக உருவாக்கப்படும் நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்க அமலாக்கத் துறை, வருமான வரித்துறை இடையே ஒத்துழைப்பை மத்திய அரசு அதிகரித்துள்ளது. இது போன்ற நிறுவனங்கள் குறித்து வரும் புகாா்கள் மீது கூடுதல் கவனம் செலுத்தி கண்காணிப்பு அதிகரிக்கப்படுகிறது என்று கூறியுள்ளாா்.

87 சட்டவிரோத கடன் செயலிகளுக்குக் தடை: சட்டவிரோத கடன் செயலிகள் தொடா்பான மற்றொரு கேள்விக்கு, ‘சட்டவிரோதமாக செயல்பட்டு வந்த 87 கடன் செயலிகளை மத்திய அரசு இதுவரை தடை செய்து முடக்கியுள்ளது. தகவல் தொழில்நுட்பச் சட்டம் 69ஏ பிரிவின்கீழ் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அந்த நிறுவனங்கள் மீது முறைப்படி விசாரணை மேற்கொண்டு, கைது நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன’ என்று அமைச்சா் ஹா்ஷ் மல்ஹோத்ரா எழுத்துமூலம் பதிலளித்தாா்.

X
Dinamani
www.dinamani.com