

8 வது ஊதியக் குழுவில் அடிப்படை ஊதியத்துடன் அகவிலைப்படியை இணைக்கும் திட்டம் இல்லை என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் குளிர்காலக் கூட்டத்தொடர் நேற்று(டிச.1) காலை தொடங்கியது.
இந்தக் கூட்டத்தொடரின் முதல்நாளில் மத்திய நிதித்துறை இணையமைச்சர் பங்கஜ் சௌத்ரி மக்களவையில் எழுத்துப் பூர்வமாக அளித்துள்ள அறிக்கையில், “8 வது ஊதியக்குழுவில் அடிப்படை ஊதியத்துடன் அகவிலைப்படியை இணைக்கும் திட்டம் இல்லை. மேலும், இது தொடர்பான எந்த பரிசீலனையும் இல்லை” எனக் குறிப்பிட்டுள்ளார்.
சமீபகாலமாகவே 50 சதவிகித அடிப்படை ஊதியத்தை அகவிலைப்படியுடன் இணைக்க வேண்டும் என பல்வேறு மத்திய அரசு பணியாளர் சங்கங்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர். இந்த நிலையில், மத்திய அரசிடம் இருந்து 8-வது ஊதியக்குழு தொடர்பாக வெளியான தகவல்கள் முக்கியத்துவம் பெற்றுள்ளன.
முன்னதாக, தில்லியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் 8-வது ஊதியக்குழுவுக்கான ஒப்புதல் அளிக்கப்பட்டது.
விலைவாசி உயர்வு மற்றும் பணவீக்கத்தின் அடிப்படையில் மத்திய அரசு ஊழியா்களின் அடிப்படை ஊதியம், அகவிலைப்படி, ஓய்வூதிய மற்றும் பிற பணப் பலன்களை மாற்றியமைக்க, ஊதியக் குழுவை அமைத்து அதன் பரிந்துரை அடிப்படையில் ஊதிய உயர்வு, 6 மாதங்களுக்கு ஒருமுறை அகவிலைப்படி உயர்வை மத்திய அரசு நடைமுறைப்படுத்தி வருகிறது.
அதனைத் தொடர்ந்து எட்டாவது ஊதியக் குழுவை அமைக்க கடந்த ஜனவரியில் கொள்கை ரீதியிலான ஒப்புதலை மத்திய அமைச்சரவை கடந்த ஜனவரி மாதம் அளித்திருந்த நிலையில், அதன் பணி வரையறைக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
அந்த வகையில் கடந்த அக்டோபர் 29 ஆம் தேதி, உச்சநீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி ரஞ்சனா பிரகாஷ் தேசாய் தலைமையில் எட்டாவது ஊதியக் குழு அமைக்கப்பட்டது.
இந்தக் குழுவில் பெங்களூரு ஐஐஎம் பேராசிரியர் புலாக் கோஷ் பகுதி நேர உறுப்பினராகவும், மத்திய பெட்ரோலிய துறைச் செயலர் பங்கஜ் ஜெயின் உறுப்பினர் செயலராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
அடுத்தாண்டு ஜனவரி 1 ஆம் தேதி முதல் 8 வது ஊதியக்குழு நடைமுறைக்கு வரும் என மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்திருந்த நிலையில், இதன்மூலம் தற்போது பணியாற்றி வரும் 49 லட்சத்துக்கும் அதிகமான மத்திய அரசு ஊழியர்களும், 65 லட்சம் ஓய்வூதியதாரர்களும் பயன்பெறுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.