

அனைத்து கைப்பேசிகளிலும் ‘சஞ்சாா் சாத்தி’ செயலியை நிறுவ வேண்டும் என்ற உத்தரவை திரும்பப் பெறுவதாக மத்திய தொலைத்தொடா்பு துறை புதன்கிழமை அறிவித்துள்ளது.
இந்தியாவில் விற்பனை செய்வதற்காக புதிதாக தயாரிக்கப்படும் அனைத்து செல்போன்களிலும் சஞ்சார் சாத்தி செயலியை முன்பே இன்பில்ட்டாக (Inbuilt) நிறுவி இருக்க வேண்டும் என்று அனைத்து நிறுவனங்களுக்கும் மத்திய தொலைத்தொடர்புத் துறை கடந்த நவ. 28 ஆம் தேதி உத்தரவிட்டது.
மேலும், ஏற்கெனவே பயன்பாட்டில் உள்ள பழைய கைப்பேசிகளிலும் மென்பொருள் புதுப்பித்தல் மூலம் செயலியைப் பதிவேற்ற உத்தரவிட்டது.
இந்த செயலி கட்டாயமாக்கப்படுவதால் குடிமக்களின் தனியுரிமை பறிக்கப்படுவதாகவும், மக்களை உளவு பார்ப்பதற்கான மத்திய அரசின் திட்டம் என்றும் எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டை முன்வைத்தன.
இதற்கு மறுப்பு தெரிவித்த மத்திய அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா, ”சஞ்சாா் சாத்தி செயலியை பயனர்கள் விரும்பினால் மட்டுமே அதனை செயல்படுத்தலாம் (ஆக்டிவேட்), இல்லையென்றால் செயல்படுத்தாமல் விட்டுவிடலாம். சஞ்சாா் சாத்தி செயலி வேண்டாம் என்றால் அதனை செல்போனில் இருந்து நீக்கி (டெலிட்) விடலாம்.” என்று விளக்கம் அளித்திருந்தார்.
இந்த நிலையில், சஞ்சாா் சாத்தி செயலியை செல்போன் தயாரிக்கும் போதே கட்டாயம் நிறுவ வேண்டும் என்ற உத்தரவை திரும்பப் பெறுவதாக மத்திய அரசு புதன்கிழமை அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக மத்திய தொலைத்தொடா்பு துறை வெளியிட்டிருக்கும் அறிவிப்பில் தெரிவித்திருப்பதாவது:
“அனைத்து குடிமக்களுக்கும் சைபர் பாதுகாப்பை வழங்கும் நோக்கத்துடன், அனைத்து ஸ்மார்ட் போன்களிலும் சஞ்சார் சாத்தி செயலியை முன்கூட்டியே நிறுவ வேண்டும் என்று அரசாங்கம் உத்தரவிட்டது. இந்த செயலி பாதுகாப்பானது மற்றும் சைபர் உலகில் உள்ள மோசடியாளர்களிடம் இருந்து குடிமக்களுக்கு உதவுவதற்காக மட்டுமே வடிவமைக்கப்பட்டுள்ளது.
இது மக்கள் பங்கேற்புடன் அனைத்து பயனர்களையும் பாதுகாப்பதோடு, சைபர் மோசடி பற்றிய புகார் அளிக்க உதவுகிறது. எப்போது வேண்டுமானாலும் இந்த செயலியை நீக்கலாம் என்று அரசால் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.
இதுவரை 1.4 கோடி பயனர்கள் இந்த செயலியைப் பதிவிறக்கம் செய்துள்ளனர் மற்றும் ஒரு நாளைக்கு 2,000 மோசடி சம்பவங்கள் குறித்த தகவல்கள் கிடைக்கின்றன. கடந்த 24 மணிநேரத்தில் 6 லட்சம் குடிமக்கள் இந்த செயலியைப் பதிவிறக்கம் செய்ய பதிவு செய்துள்ளனர். இதன் பயன்பாடு 10 மடங்கு அதிகரித்துள்ளது.
சஞ்சார் சாத்தி செயலிக்கு வரவேற்பு அதிகரித்து வருவதால், செல்போன் உற்பத்தியாளர்களுக்கு முன் நிறுவலை கட்டாயமாக்க வேண்டாம் என்று அரசாங்கம் முடிவு செய்துள்ளது.” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.