

சத்தீஸ்கரின் பிஜாப்பூர் மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினருடன் நடந்த மோதலைத் தொடர்ந்து மேலும் 6 நக்சல்களின் உடல்கள் மீட்கப்பட்டுள்ள நிலையில், துப்பாக்கிச் சண்டையில் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை 18 ஆக உயர்ந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
பிஜாப்பூரில், தண்டேவாடா மாவட்டத்தின் எல்லையில் அமைந்துள்ள வனப்பகுதியில் மத்திய ரிசர்வ் காவல் படையின் கோப்ரா பிரிவினர், மாவட்ட ரிசர்வ் காவல் படையினர், சத்தீஸ்கர் காவல் துறையினர் இணைந்து நக்சல்களுக்கு எதிரான நடவடிக்கைகளில் நேற்று (டிச. 3) ஈடுபட்டனர். இந்த நிலையில், அங்குப் பதுங்கியிருந்த நக்சல்கள் மற்றும் பாதுகாப்புப் படையினர் இடையில் கடும் துப்பாக்கிச் சூடு நடைபெற்றது.
இந்த துப்பாக்கிச் சூட்டில் முன்னதாக நேற்று 12 நக்சல்கள் கொல்லப்பட்ட நிலையில், இன்று மேலும் 6 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளது. இதையடுத்து பலியான நக்சல்களின் எண்ணிக்கை 18 ஆக உயர்ந்துள்ளது. மேலும் அந்தப் பகுதியில் தேடுதல் நடவடிக்கை நடந்து வருகின்றது. இத்துடன் நேற்று நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில் மாநில காவல்துறையின் ஒரு பிரிவான மாவட்ட ரிசர்வ் காவல்படையைச் சேர்ந்த 3 வீரர்கள் கொல்லப்பட்டனர்.
பிஜாப்பூர் காவல் எல்லையில் உயிரிழந்த மூன்று பாதுகாப்புப் படையினருக்கும் அவரது குடும்ப உறுப்பினர்கள், பொது பிரதிநிதிகள், அதிகாரிகள் மற்றும் உள்ளூர் மக்களும் மலர்வளையம் வைத்து அவர்களுக்கு அஞ்சலி செலுத்தினர்.
இறந்த தலைமைக் காவலர் மோனு வடடி, காவலர் துகாரு கோண்டே மற்றும் ஜவான் ரமேஷ் சோதி ஆகியோர் பிஜப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள். மக்கள் அஞ்சலி செலுத்திய பின்னர் அவர்களின் உடல்கள் சொந்த இடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டன.
சத்தீஸ்கரில் 2025 ஆம் ஆண்டில் மட்டும் 275 நக்சல்கள் பாதுகாப்புப் படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டனர். இடதுசாரி தீவிரவாதத்தை முற்றிலுமாக ஒழிக்க மார்ச் 31, 2026 வரை மத்திய அரசு காலக்கெடு நிர்ணயித்துள்ளது.
இதையும் படிக்க: மூன் வாக் - 5 பாடல்களையும் பாடிய ஏ. ஆர். ரஹ்மான்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.