

நூற்றுக்கணக்கான இண்டிகோ விமானங்கள் ரத்து மற்றும் தாமதமாக இயக்கப்படுவதால், நாட்டின் அனைத்து விமான நிலையங்களிலும் பயணிகள் அலைமோதி வருகின்றனர்.
நாட்டின் மிகப் பெரிய விமானப் போக்குவரத்து நிறுவனமான இண்டிகோ, கடந்த சில நாள்களாக விமான சேவை ரத்து, விமான தாமதம் எனப் பல்வேறு பிரச்னைகளை எதிர்கொண்டு வருகின்றது.
நாளொன்றுக்கு 2,200-க்கும் மேற்பட்ட விமானங்களை இண்டிகோ நிறுவனம் இயக்கும் நிலையில், கடந்த செவ்வாய்க்கிழமை கிட்டத்திட்ட 1,400 விமானங்கள் (65%) தாமதமாக இயக்கப்பட்டன.
தில்லி, மும்பை, கொல்கத்தா, பெங்களூரு, சென்னை என நாட்டின் முக்கிய நகரங்களில் இருந்து இயக்கப்படும் 200-க்கும் மேற்பட்ட விமானங்களின் சேவை நேற்று ரத்து செய்யப்பட்டன.
இந்த நிலையில், இன்றும் இதுவரை 200-க்கும் மேற்பட்ட விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளதால் பயணிகள் அவதிக்குள்ளாகியுள்ளனர்.
பெங்களூருவில் 70+, தில்லியில் 30+, ஹைதராபாத்தில் 60+, கொல்கத்தாவில் 30-க்கும் மேற்பட்ட விமானங்களை இண்டிகோ நிறுவனம் ரத்து செய்துள்ளது. மேலும், நாட்டின் பல்வேறு விமான நிலையங்களிலும் விமானம் ரத்து செய்யப்பட்டுள்ளது.
பயணிகள் அவதி
ஹைதராபாத் விமான நிலையத்தில் சிக்கியிருக்கும் பயணி ஒருவர், “நேற்று மாலை 6 மணியில் இருந்து இன்று காலை 9 மணிவரை புணே விமானத்துக்காக காத்திருக்கிறேன். இண்டிகோ நிறுவனம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை” என்று பதிவிட்டுள்ளார்.
இதேபோல், மற்றொரு பயணி, “ஹைதராபாத் விமான நிலையத்தில் மிகப்பெரிய குழப்பமான சூழல் நிலவுகிறது. விமானங்கள் 12 மணிநேரத்துக்கும் மேலாக தாமதமாக வருகின்றது. முறையான தங்கும் வசதியும் கொடுக்கப்படவில்லை. எப்போது கேட்டாலும் 2 மணிநேரத்தில் விமானம் வந்துவிடும் என்று 12 மணிநேரமாக கூறிவருகிறார்கள்” எனத் தெரிவித்துள்ளார்.
மேலும், பல பயணிகள் குடும்பத்துடன் விமான நிலையத்தில் காத்திருக்கும் நிலையில், இண்டிகோவின் விமான நிலையப் பணியாளர்களுடன் பலர் வாக்குவாதத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
காரணம் என்ன?
விமானிகள் மற்றும் விமான பணிப்பெண்களுக்கு போதுமான ஓய்வு நேரத்தை உறுதி செய்யும் வகையில், விமான கடமை நேர வரம்புகள் இரண்டாம் கட்ட விதிமுறைகளை சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகம் அமல்படுத்தியது.
அதாவது புதிய விதிமுறையின்படி, விமானிகள் மற்றும் விமான பணிப்பெண்களுக்கு கட்டாய ஓய்வு நேரம் உள்பட நாளுக்கு 8 மணிநேரம், வாரத்துக்கு 35 மணிநேரம், மாதத்துக்கு 125 மணிநேரம், ஆண்டுக்கு 1,000 மணிநேரம் மட்டுமே பணி நேரமாக இருக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், புதிய விதிமுறைகள் அமல்படுத்திய பிறகு விமானிகள் மற்றும் விமானப் பணியாளர்கள் பற்றாக்குறையை இண்டிகோ நிறுவனம் சந்தித்துள்ளது.
கடந்த நவம்பர் மாதம் மட்டும் இண்டிகோ நிறுவனத்தின் 1,232 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
பயணிகளுக்கு ஏற்பட்டுள்ள அசெளகரியத்துக்கு மன்னிப்பு கோரியுள்ள இண்டிகோ நிறுவனம், இந்த பிரச்னைகளுக்கு தீர்வு காண 24 மணிநேரமும் பணிபுரிந்து வருவதாகவும், விரைவில் பிரச்னை முடிவுக்கு வரும் என்றும் தெரிவித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.