திருப்பரங்குன்றம்: தனி நீதிபதி உத்தரவால் சட்டம் - ஒழுங்கு பாதிப்பு! தமிழக அரசு வாதம்!

திருப்பரங்குன்றம் மேல்முறையீட்டு வழக்கில் தமிழக அரசு வாதம்...
திருப்பரங்குன்றம்
திருப்பரங்குன்றம்
Updated on
1 min read

திருப்பரங்குன்றம் தீபம் தொடர்பான வழக்கில் தனி நீதிபதியின் உத்தரவால் சட்டம் - ஒழுங்கு பிரச்னை ஏற்பட்டுள்ளதாக சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தமிழக அரசு தெரிவித்துள்ளது.

திருப்பரங்குன்றம் மலையில் உள்ள உச்சிப்பிள்ளையார் கோயில் மண்டபத்தில் கார்த்திகை தீபம் ஏற்றுவதற்குப் பதிலாக, மலை உச்சியில் அமைந்துள்ள தீபத் தூணில் ஏற்ற உத்தரவிட வேண்டும் என்று ராம. ரவிக்குமார் என்பவர் தொடர்ந்த வழக்கில், மலை உச்சியில் தீபத்தை ஏற்ற சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வு நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் உத்தரவிட்டார்.

இதனை கோயில் நிர்வாகம் அமல்படுத்தாததால், நேற்று மாலையே சிஐஎஸ்எஃப் வீரர்களின் பாதுகாப்போடு மலையில் உள்ள தீபத் தூணில் தீபத்தை ஏற்ற நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் உத்தரவிட்டார்.

இதனிடையே, திருப்பரங்குன்றத்தில் கூடியிருந்த இந்து அமைப்பினர் காவல்துறையின் தடுப்புகளை மீறி மலையேற முயற்சித்தித்ததால் 144 தடை உத்தரவை மதுரை மாவட்ட ஆட்சியர் பிறப்பித்தார்.

மேலும், ஒரு நீதிபதி உத்தரவை ரத்து செய்யக் கோரி தமிழக அரசு தரப்பில் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மேல்முறையீடு செய்யப்பட்டது.

இதுதொடர்பான விசாரணை இரு நீதிபதிகள் அமர்வில் தொடங்கியுள்ள நிலையில், தமிழக அரசு தரப்பில் வாதம் முன்வைக்கப்பட்டு வருகின்றது.

அரசுத் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், “திருப்பரங்குன்றத்தில் மதப் பிரச்னை ஏற்படும் நிலை உருவானது. அரசின் அச்சம் உண்மையாகிவிட்டது. நீதிமன்ற உத்தரவை வைத்துக் கொண்டு மனுதாரர் தரப்பு கலவரத்தை ஏற்படுத்தியுள்ளது. காவல்துறையின் தடுப்புகள் உடைக்கப்பட்டுள்ளன, இரண்டு காவலர்கள் காயமடைந்துள்ளனர்.

தனி நீதிபதி உத்தரவால் திருப்பரங்குன்றத்தில் மத நல்லிணக்கப் மற்றும் சட்டம் - ஒழுங்கு பிரச்னை ஏற்பட்டுள்ளது. சிஐஎஸ்எஃப் வீரர்கள் நீதிமன்ற பாதுகாப்புக்காக உள்ளவர்கள். அவர்களின் அதிகார வரம்பு நீதிமன்றத்துக்குள் மட்டுமே. அவர்களை மனுதாரரின் பாதுகாப்புக்காக அனுப்பியது தவறு.

அவமதிப்பு வழக்கு தொடர்ந்தால், உத்தரவை நிறைவேற்றப்படாதது ஏன்? அதற்கான விளக்கத்தை மட்டுமே கேட்க முடியும். ஆனால், அவமதிப்பு வழக்கில் புதிய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. சட்டத்தை மீறி தனி நீதிபதி உத்தரவை பிறப்பித்துள்ளார்.

10 பேருடன் சென்று தீபம் ஏற்ற தனி நீதிபதி உத்தரவிட்ட நிலையில், மனுதாரர் கூட்டமாக சென்று பிரச்னை ஏற்படுத்தியதால் அவர் மீதே நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை தேவை.” எனத் தெரிவிக்கப்பட்டது.

144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது தொடர்பாக நீதிபதிகளின் கேள்விக்கு, கலவரத்தை தடுப்பதற்காகவே 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டதாக அரசுத் தரப்பு பதிலளித்துள்ளது.

மேலும், திருப்பரங்குன்றம் கோயிலைவிட தீபத் தூண் பழமை வாய்ந்ததா? என்ற நீதிபதிகளின் கேள்விக்கு, அதுபற்றிய தகவல் தெரியவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Summary

Thiruparankundram case: The government's fears have come true! Tamil Nadu government's argument!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com