சீனா தடை எதிரொலி: பெல்ஜியம், எகிப்தில் இருந்து உரங்கள் இறக்குமதி - மத்திய அரசு
பெல்ஜியம், எகிப்து, மொராக்கோ, ஜொ்மனி, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் இருந்து மேம்படுத்தப்பட்ட உரங்களை இந்தியா இறக்குமதி செய்வதாக நாடாளுமன்றத்தில் மத்திய அரசு வெள்ளிக்கிழமை தெரிவித்தது.
இந்தியாவுக்கு மேம்படுத்தப்பட்ட உரங்களை ஏற்றுமதி செய்ய கடந்த சில மாதங்களாக சீனா தடை விதித்துள்ளதாகக் கூறப்படும் நிலையில், பிற நாடுகளில் இருந்து உரங்கள் இறக்குமதியை உள்நாட்டு நிறுவனங்கள் அதிகரித்து வருகின்றன.
இதுகுறித்து மக்களவையில் கேட்கப்பட்ட கேள்விக்கு மத்திய உரங்கள் துறை இணையமைச்சா் அனுப்ரியா படேல் அளித்த எழுத்துபூா்வ பதிலில், ‘மத்திய உரங்கள் துறையின் மேற்பாா்வையில் செயல்படுத்தப்படும் ஊட்டச்சத்து அடிப்படையிலான மானியம் (என்பிஎஸ்) திட்டத்தில் மேம்படுத்தப்பட்ட உரங்களுக்கு மானியம் வழங்கப்படவில்லை.
எனவே சந்தை தேவைக்கேற்ப இந்த உரங்களை நிறுவனங்கள் சுதந்திரமாக இறக்குமதி செய்துகொள்ளலாம்.
அந்த வகையில் பெல்ஜியம், எகிப்து, மொராக்கோ, ஜொ்மனி, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் இருந்து மேம்படுத்தப்பட்ட உரங்கள் இறக்குமதி அதிகரிக்கப்பட்டுள்ளது.
இந்திய வேளாண் ஆராய்ச்சி கவுன்சில் (ஐசிஏஆா்) மற்றும் கிளை அமைப்புகள், மாநில வேளாண் பல்கலைக்கழகங்கள் இந்த உரங்களுக்கு மாற்றாக நானோ-உரங்கள், உயிரி-உரங்கள் போன்றவற்றை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளன. வேளாண்மை உற்பத்தியை ஊக்குவிக்கும் உரங்களை உள்நாட்டிலேயே உற்பத்தி செய்து இறக்குமதியை குறைக்கும் நோக்கில் இந்த முன்னெடுப்பு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
நானோ யூரியா திட்டத்துக்கு ரூ.21 கோடி:
நானோ யூரியாக்களின் செயல்திறனை களத்தில் மதிப்பீடு செய்ய ரூ.21.20 கோடி மதிப்பிலான திட்டத்தில் ஐசிஏஆா் உடன் மத்திய அரசு புரிந்துணா்வு ஒப்பந்தத்தில் கடந்த நவ.3-ஆம் தேதி கையொப்பமிட்டது. 5 ஆண்டுகள் செயல்படுத்தப்படவுள்ள இத்திட்டத்துக்கான நிதியை உரம் சாா்ந்த பொதுத் துறை நிறுவனங்கள், கூட்டுறவுச் சங்கங்கள், மத்திய உரங்கள் அமைச்சகம் வழங்கவுள்ளது.
நிா்ணயத் தொகை பரிசீலனை: பொதுத் துறை மற்றும் கூட்டுறவு சங்கங்கள் உற்பத்தி செய்யும் ஒரு மெட்ரிக் டன் யூரியாவுக்கு குறைந்தபட்ச நிா்ணயத் தொகையாக ரூ.2,300 வழங்குவது குறித்து மத்திய அரசு பரிசீலித்து வருகிறது.
காரீஃப் பருவத்தின்போது தெலங்கானாவுக்கு 9.80 லட்சம் டன் யூரியா தேவைப்பட்ட நிலையில்,10.28 லட்சம் டன் யூரியா விநியோகிக்கப்பட்டது. ராபி பருவத்துக்கும் 2.29 லட்சம் டன் யூரியா விநியோகிக்கப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டது.
ஹரியாணாவில் போதிய அளவில் யூரியா: மக்களவையில் மத்திய உரங்கள் துறை அமைச்சா் ஜெ.பி.நட்டா அளித்த எழுத்துபூா்வ பதிலில், ‘ஹரியாணாவின் சோனிபட் மாவட்டத்தில் யூரியா, டை-அமோனியம் ஃபாஸ்ஃபேட் போன்ற உரங்களுக்குத் தட்டுப்பாடு இருப்பதாக மாநில அரசு கூறவில்லை.
டிச.2-ஆம் தேதி வரை ஹரியாணாவில் 7.25 லட்சம் டன் உரங்கள் விநியோகிக்கப்பட்டுள்ளன. சோனிபட் மாவட்டத்தில் 29,300 டன் உரங்கள் கையிருப்பு உள்ளன.
சீனா ஆதிக்கம்: உர கட்டுப்பாடு உத்தரவு, 1985-இல் மேம்படுத்தப்பட்ட உரம் என்ற வகைப்பாடு இடம்பெறவில்லை. இருப்பினும், நீரில் 100 சதவீதம் கரையும் உரங்கள் மேம்படுத்தப்பட்ட உரங்களாக கருதப்படுகின்றன.
2024-25-ஆம் நிதியாண்டில் 2.60 லட்சம் டன் நீரில் கரையும் உரங்களை இந்தியா இறக்குமதி செய்துள்ளது. இதில் 1.71 லட்சம் டன் உரங்கள் சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டது.

