இண்டிகோ பிரச்னை: விமான ஊழியர்களுக்கான ஓய்வு விதிகள் நிறுத்திவைப்பு! - டிஜிசிஏ
இண்டிகோ விமான சேவையில் கடுமையான பாதிப்பு ஏற்பட்ட நிலையில் விமானிகள் மற்றும் விமான ஊழியர்களுக்கான புதிய ஓய்வு விதிகளை நிறுத்திவைப்பதாக சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகம்(டிஜிசிஏ) அறிவித்துள்ளது.
விமானப் பணியாளா்களுக்கு குறிப்பாக விமானிகளுக்கு குறிப்பிட்ட ஓய்வு அளிக்கும்பொருட்டு ‘விமானப் பணி நேரம் மற்றும் ஓய்வு விதிகளை’ (எஃப்டிடிஎல்) மத்திய அரசு கொண்டு வந்தது. இதன்படி, விமானிகள் மற்றும் விமான பணிப்பெண்களுக்கு கட்டாய ஓய்வு நேரம் உள்பட நாளுக்கு 8 மணி நேரம், வாரத்துக்கு 35 மணி நேரம், மாதத்துக்கு 125 மணி நேரம், ஆண்டுக்கு 1,000 மணி நேரம் மட்டுமே பணி நேரமாக இருக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டது.
இண்டிகோ நிறுவனத்தில் போதிய விமானிகள் எண்ணிக்கை இல்லாததால் இண்டிகோ விமானச் சேவை கடந்த சில நாள்களாக பாதிக்கப்பட்டுள்ளது. நூற்றுக்கணக்கான விமானங்கள் ரத்து செய்யப்பட்டும் ஆயிரக்கணக்கான விமானங்கள் தாமதமாக இயக்கப்பட்டும் வருகின்றன. நாடு முழுவதும் உள்ள விமான நிலையங்களில் குவிந்துள்ள இண்டிகோ விமானப் பயணிகளால் அசாதாரண சூழல் நிலவுகிறது.
இன்று தலைநகர் தில்லி முதல் சென்னை வரை இந்தியா முழுவதும் உள்ள இண்டிகோ விமான சேவைகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில் சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
அதில் விமானிகள் மற்றும் ஊழியர்களுக்கான விடுப்பு மற்றும் பணி நேரத்திற்கான விதிமுறைகளைத் தற்காலிகமாக திரும்பப் பெற்றுள்ளது.
"விமான சேவைத் துறையில் பல்வேறு கட்டுப்பாடுகள், வானிலை, பயணிகளின் தேவை அதிகரிப்பால் தற்போது விமான சேவையில் குறிப்பிடத்தக்க பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இது பயணிகளுக்கு கடுமையான சிரமத்தை ஏற்படுத்தியுள்ளது. பயணிகளின் தேவைக்கு ஏற்ப விமான சேவையை அதிகப்படுத்த வேண்டும்.
தற்போது விடுமுறை காலம் மற்றும் திருமண நிகழ்வுகள் அதிகம் நடக்கும் காலம் என்பதால் விமான நிறுவனங்கள் தயாராக இருக்க வேண்டியது அவசியம். வானிலை தொடர்பான தாக்கங்களையும் கவனத்தில் கொள்வது நல்லது.
தற்போதுள்ள சூழ்நிலையை சரிசெய்ய இந்தியா முழுவதும் உள்ள அனைத்து விமானிகள், விமான சங்கங்களின் முழு ஒத்துழைப்பையும் நாங்கள் கோருகிறோம். பயணிகள் மேலும் சிரமத்தை எதிர்கொள்ளா வகையில் விமானிகள் மற்றும் விமான நிறுவங்களுக்கு இடையே உள்ள ஒருங்கிணைப்பை வலுப்படுத்த வேண்டும். விமான நிறுவனங்கள் விரைந்து பிரச்னையை சரிசெய்ய வேண்டும்.
விமானப் பயணம் பாதுகாப்பாகவும் நம்பகமானதாகவும் பயணிகளுக்கு இடையூறு ஏற்படாதா வண்ணம் இருக்க வேண்டும். விமானிகள் தொடர்ந்து பயணிகளுக்கு சேவையாற்றிட வேண்டும்.
மேலும், விமானிகளுக்கு வாராந்திர ஓய்வு நாளைத் தவிர வேறு விடுமுறைகள் அளிக்கப்படக் கூடாது" என்றும் கூறியுள்ளது.
மேலும் விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சகம், இந்தியாவில் விமான சேவை பாதிப்பு விரைவில் சீராகும். பாதிப்புகளை இண்டிகோ நிறுவனம் விரைந்து சரிசெய்ய வேண்டும். விமான நிலையத்தில் சிக்கிய பயணிகளுக்கு ஹோட்டல் வசதி, விமானம் ரத்து செய்யப்பட்டால், கட்டண தொகை திரும்பி வழங்கப்பட வேண்டும். இன்று நள்ளிரவு முதல் விமான சேவை படிப்படியாக சீராகும்" என்று கூறியுள்ளது.
இதனிடையே இண்டிகோ நிறுவனம் தனது பயணிகளிடம் மன்னிப்பு கோரியுள்ளது.
"எங்கள் ஒவ்வொரு வாடிக்கையாளருக்கும்.... விமான சேவை பாதிப்பு ஏற்பட்டது உண்மையில் வருத்தமளிக்கிறது. நாங்கள் இதனை கவனத்தில் கொள்கிறோம். வாடிக்கையாளர்களிடம் நாங்கள் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறோம். கடந்த சில நாள்கள் உங்களில் பலருக்கு எவ்வளவு கடினமாக இருந்தது என்பதைப் புரிந்துகொள்கிறோம். இது ஒரே இரவில் தீர்க்கப்படாது என்றாலும் உங்களுக்கு அனைத்து வகையிலும் உதவவும் எங்களது செயல்பாடுகளை விரைந்து சரிசெய்ய அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வருகிறோம்" என்று தெரிவித்துள்ளது.
DGCA puts new pilot rest rule behind IndiGo flight cancellations on hold
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

