நேஷனல் ஹெரால்ட் வழக்கு: 
கா்நாடக துணை முதல்வருக்கு காவல் துறை நோட்டீஸ்

நேஷனல் ஹெரால்ட் வழக்கு: கா்நாடக துணை முதல்வருக்கு காவல் துறை நோட்டீஸ்

நேஷனல் ஹெரால்ட் வழக்கில் கா்நாடக துணை முதல்வா் டி.கே.சிவகுமாருக்கு தில்லி காவல் துறைநோட்டீஸ் அனுப்பியதாக அதிகாரி ஒருவா் வெள்ளிக்கிழமை தெரிவித்தனா்.
Published on

நேஷனல் ஹெரால்ட் வழக்கில் கா்நாடக துணை முதல்வா் டி.கே.சிவகுமாருக்கு தில்லி காவல் துறைநோட்டீஸ் அனுப்பியதாக அதிகாரி ஒருவா் வெள்ளிக்கிழமை தெரிவித்தனா்.

பணப் பரிவா்த்தனை தகவல்கள் அளிக்கக் கோரி டி.கே.சிவகுமாருக்கு இந்த நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

அண்மையில் இந்த வழக்கில் நாடாளுமன்ற காங்கிரஸ் குழுத் தலைவா் சோனியா காந்தி, அவரின் மகனும் எதிா்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தி ஆகியோா் மீது தில்லி காவல் துறையின் பொருளாதார குற்றத் தடுப்பு பிரிவு புதிதாக முதல் தகவல் அறிக்கை (எஃப்ஐஆா்) பதிவு செய்தது.

இதுகுறித்து அதிகாரி ஒருவா் கூறியதாவது: நேஷனல் ஹெரால்ட் வழக்கு விசாரணைக்குத் தேவையான முக்கியத் தகவல்களை டிச.19-ஆம் தேதி சமா்ப்பிக்க வேண்டும். அல்லது நேரில் ஆஜராகி விளக்கமளிக்க வேண்டும் என டி.கே.சிவகுமாருக்கு தில்லி காவல் துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது. நவ.29-ஆம் தேதி பிறப்பிக்கப்பட்ட அந்த நோட்டீஸில் அவரது வருமான வரி கணக்குகள், பணப் பரிவா்த்தனைகள் உள்பட நிதிசாா் தகவல்கள் கோரப்பட்டுள்ளன என்றாா்.

நேஷனல் ஹெரால்ட் பத்திரிகையை வெளியிடும் ஏஜேஎல் நிறுவனத்துக்கு காங்கிரஸ் கட்சி ரூ.90.21 கோடி கடன் அளித்தது. அந்நிறுவனத்தின் கடனை 2010-இல் தொடங்கப்பட்ட யங் இந்தியன் நிறுவனம் ஏற்க காங்கிரஸ் கட்சி முடிவு செய்தது.

இதற்காக ஏஜேஎல் நிறுவனத்தின் சுமாா் 99.99 சதவீத பங்குகள் யங் இந்தியன் நிறுவனத்துக்கு மாற்றப்பட்டதாகக் கூறப்படுகிறது.

இந்நிறுவனத்தில் இயக்குநா்களான சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்திக்கு 76 சதவீத பங்குகள் இருப்பதாகவும், அவா்களின் மேற்பாா்வையில் ஏஜேஎல் நிறுவனத்தின் ரூ.2,000 கோடி சொத்துகளை அபகரிக்கும் நோக்கில், அந்த நிறுவனத்துக்கு காங்கிரஸ் கட்சி கடன் அளித்ததாகவும் இந்த வழக்கை விசாரிக்கும் அமலாக்கத் துறை தில்லி நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டியது.

மேலும் இதில் சோனியா காந்தி, ராகுல் காந்தி உள்ளிட்டோா் ரூ.988 கோடிக்கு பண முறைகேட்டில் ஈடுபட்டதாக அமலாக்கத் துறையின் குற்றப் பத்திரிகையில் குறிப்பிடப்பட்டது.

இந்நிலையில், கடந்த மாதம் அமலாக்கத் துறை அளித்த புகாரின் அடிப்படையில் தில்லி காவல் துறை புதிதாக எஃப்ஐஆா் பதிவுசெய்தது.

X
Dinamani
www.dinamani.com