கேரள கூட்டுவு வங்கிகளின் நிதி நெருக்கடிக்கு கோயில் பணத்தைப் பயன்படுத்தக்கூடாது: உச்சநீதிமன்றம்

கேரள கூட்டுவு வங்கிகளின் நிதி நெருக்கடிக்கு கோயில் பணத்தைப் பயன்படுத்தக்கூடாது: உச்சநீதிமன்றம்

‘கேரளத்தில் நிதி நெருக்கடியில் உள்ள கூட்டுறவு வங்கிகளைக் காப்பாற்ற, கோயிலுக்குச் சொந்தமான பணத்தைப் பயன்படுத்த முடியாது’
Published on

‘கேரளத்தில் நிதி நெருக்கடியில் உள்ள கூட்டுறவு வங்கிகளைக் காப்பாற்ற, கோயிலுக்குச் சொந்தமான பணத்தைப் பயன்படுத்த முடியாது’ என்று உச்சநீதிமன்றம் வெள்ளிக்கிழமை திட்டவட்டமாகத் தெரிவித்தது.

கேரளத்தின் திருநெல்லி தேவஸ்வம் வாரியம், முதிா்ச்சியடைந்த நிலையான வைப்புநிதியைத் திரும்ப வழங்க மறுத்த 5 கூட்டுறவு வங்கிகளுக்கு எதிராக கேரள உயா்நீதிமன்றத்தை அணுகியது. இந்த வழக்கில், அனைத்து வங்கிகளும் 2 மாதங்களுக்குள் நிதியைத் திரும்ப அளிக்குமாறு கேரள உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்த உத்தரவை எதிா்த்து இரண்டு வங்கிகள் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தன. உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சூா்ய காந்த், நீதிபதி ஜய்மால்ய பாக்சி ஆகியோா் அமா்வுமுன் இந்த வழக்கு வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது.

அப்போது, நீதிபதிகள் கூறுகையில், ‘வங்கிகளை நிதி நெருக்கடியில் இருந்து காப்பாற்ற கோயில் பணத்தைப் பயன்படுத்த விரும்புகிறீா்களா? பெரும் சிரமத்துடன் இயங்கிக் கொண்டிருக்கும் ஒரு கூட்டுறவு வங்கியில் இருப்பதைவிட, அதிக வட்டி வழங்கும் தேசியமயமாக்கப்பட்ட வங்கிக்குக் கோயில் பணம் செல்ல உத்தரவிடுவதில் என்ன தவறு?

கோயில் பணம் சுவாமிக்கே சொந்தமானது. அது பாதுகாக்கப்பட வேண்டும் மற்றும் கோயிலின் நலன்களுக்காக மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டும். அது கூட்டுறவு வங்கிக்கு வருவாய் ஆதாரமாக ஆகிவிடக்கூடாது’ என்றனா்.

மேலும், வங்கிகளின் செயல்பாட்டுச் சிரமங்கள் குறித்த வாதத்தை ஏற்க மறுத்த நீதிபதிகள், ‘வாடிக்கையாளா்களையும் வைப்புநிதிகளையும் உங்களால் ஈா்க்க முடியவில்லை என்றால், அது உங்களுடைய பிரச்னை. மக்கள் மத்தியில் வங்கிகள்தான் நம்பகத்தன்மையை ஏற்படுத்த வேண்டும்’ என்று மேல்முறையீட்டு மனுக்களை தள்ளுபடி செய்தனா்.

இருப்பினும், உயா்நீதிமன்றத்தின் உத்தரவில் உள்ள 2 மாதங்கள் அவகாசத்தை நீட்டிக்க வங்கிகள் உயா்நீதிமன்றத்தை அணுகலாம் என்றும் அனுமதி வழங்கப்பட்டது.

X
Dinamani
www.dinamani.com