மக்களவையில் எதிரொலித்த திருப்பரங்குன்றம் தீபம்! டி.ஆர். பாலு - எல் முருகன் இடையே வாதம்

மக்களவையில் திருப்பரங்குன்றம் தீபம் விவகாரம் குறித்து டி.ஆர். பாலு - எல் முருகன் இடையே வாதம் நடைபெற்றது.
டி.ஆர். பாலு
டி.ஆர். பாலு
Updated on
1 min read

மக்களவையில் திருப்பரங்குன்றம் தீபம் விவகாரம் குறித்து இன்று கேள்வி நேரத்தின்போது திமுக எம்.பி. டி.ஆர். பாலு முக்கிய வாதத்தை முன் வைத்தார். அதற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜக எம்.பி. எல் முருகனும் பேசினார்.

கேள்வி நேரத்தின் போது திமுக எம்.பி. டி.ஆர். பாலு, தமிழகத்தில் கடந்த ஒரு சில நாள்களாக பிரச்னை எழுந்துள்ளது. அதன் காரணமாக அமைதியற்ற நிலை உருவாகியிருப்பதால் அதனை இங்கே கவனத்துக்குக் கொண்டு வந்துள்ளேன்.

கார்த்திகை தீபத்தை முன்னிட்டு, மதுரையில் அமைந்துள்ள சுப்பிரமணியம் சுவாமி கோயிலான திருப்பரங்குன்றம் மலை மீது அமைந்திருக்கும் தீபத் தூணில் யார் தீபம் ஏற்றுவது என்பதே அந்த சர்ச்சை.

அதாவது, தீபத் தூணில் அரசு அங்கீகாரம் பெற்ற அறநிலையத் துறை அதிகாரிகளால், அந்த தீபம் ஏற்றப்படவேண்டுமா? அல்லது யாராவது அப்பகுதியில் வாழும் அல்லது தெரிந்தவர்கள் யாரேனும் அந்த தீபத்தை ஏற்ற வேண்டுமா? என்பதே. அது. அது தொடர்பாக நீதிமன்றத்தை நாடி, தீபம் ஏற்ற வேண்டும் என்று ஆர்எஸ்எஸ் நீதிபதி மூலமாக உத்தரவையும் பெற்றுவிட்டார்கள் என்று கூறினார்.

டி.ஆர். பாலு, நீதிபதியை ஆர்எஸ்எஸ் என்று அழைத்ததற்கு பாஜக உள்ளிட்ட எம்.பி.க்கள் கண்டனம் தெரிவித்து கோஷம் எழுப்பினர். அமைச்சர் கிரண் ரிஜிஜூ, நாடாளுமன்றத்தின் கண்ணியம் காக்கப்பட வேண்டும், சட்டத் துறையினர் குறித்து இவ்வாறு பேசக் கூடாது என்றும், அதற்கு கண்டனம் தெரிவிப்பதாகவும் கூறினார்.

இது நீதித்துறை தொடர்பான விவகாரம். அது மட்டுமல்லாமல் நீதிபதி குறித்துப் பேசியது அவைக் குறிப்பில் இருந்து நீக்கப்படுகிறது என்று அவைத் தலைவர் கூறி, டி.ஆர். பாலுவை பேச அனுமதித்தார். தொடர்ந்து பேசிய டி.ஆர். பாலு, திருப்பரங்குன்றம் மலை மீது தீபம் ஏற்றுமாறு நீதிபதி பிறப்பித்த தீர்ப்பையும் டி.ஆர். பாலு வாசித்துக் காட்டினார். இது குறித்து நாடாளுமன்ற கவனத்துக்குக் கொண்டு வர விரும்புவதாகவும் அங்கு, மதக் கலவரம் ஏற்படும் ஆபத்து இருப்பதாகவும், இரு மதத்தினர் இடையே வன்முறை நிகழும் ஆபத்து இருப்பதாகவும் டி.ஆர். பாலு கூறினார்.

இது குறித்து பாஜக எம்.பி. எல். முருகன் பேசுகையில், தமிழகத்தின், மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றத்தில் உயர் நீதிமன்றம் உத்தரவிட்ட பிறகும் அங்கு மக்களின் உரிமையை நிலை நாட்ட அரசு மறுத்துவிட்டது. உயர் நீதிமன்ற உத்தரவை தமிழக அரசும் காவல்துறையும் மதிக்காமல் தீபம் ஏற்றச் சென்ற மக்களை தடுத்து நிறுத்தியிருக்கிறார்கள்.

மதுரை உயர் நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்ட பிறகு, பாதுகாப்பு வீரர்களுடன் சென்று திருப்பரங்குன்றத்தில் விளக்கேற்றச் சொன்னார்கள். ஆனால், தீபம் ஏற்ற விடாமல் தடுத்து, அங்குச் சென்றவர்களைக் கைது செய்திருக்கிறார்கள். அராஜகப் போக்கை திமுக அரசு அரங்கேற்றியிருக்கிறது. அங்குள்ள காவல்துறையும் மக்களின் வழிபாட்டு உரிமையை தடுத்துள்ளார்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com