இண்டிகோ விமானங்களின் குளறுபடி தொடர்பாக அந்நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரியிடம் விளக்கம் கேட்டு விமானப் போக்குவரத்து இயக்குநரகம் (டிஜிசிஏ) நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
விமானிகளின் பணிச் சுமையைக் குறைக்க, கடந்த நவம்பா் 1-ஆம் தேதிமுதல் விமானிகளுக்கான திருத்தப்பட்ட பணி நேரக் கட்டுப்பாட்டு விதிகள் (எஃப்டிடிஎல்) அமலுக்கு வந்தன. இந்த விதிகளின்படி, வாராந்திர ஓய்வையும் வருடாந்திர விடுமுறைகளையும் தனித்தனியாகக் கருத வேண்டும். அதாவது, வாராந்திர 48 மணி நேர ஓய்வுக்குப் பதிலாக விடுமுறையை ஈடு செய்யக் கூடாது.
இந்த விதிமுறை மாற்றங்களுக்கு இண்டிகோ போதிய திட்டமிடாததால், அந்த நிறுவனத்தில் விமானிகள் பற்றாக்குறை ஏற்பட்டு, கடந்த சில நாள்களாக அன்றாட விமான சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன.
கடந்த வியாழக்கிழமை 550 விமானங்கள், வெள்ளிக்கிழமை 1,000-க்கும் மேற்பட்ட இண்டிகோ விமானங்கள் ரத்து செய்யப்பட்ட நிலையில், ஐந்தாவது நாளாக சனிக்கிழமை நாட்டின் முக்கிய நகரங்களில் இருந்து இயக்கப்படும் 800-க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. இதனால் விமான நிலையங்களில் ஆயிரக்கணக்கான பயணிகள் காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
இதைத் தொடா்ந்து, மத்திய விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சா் ராம் மோகன் நாயுடு தலைமையில் வெள்ளிக்கிழமை உயா்நிலைக் கூட்டம் நடைபெற்றது. அதில் விமான சேவைகளை சீா்செய்ய அவசர நடவடிக்கையாக விமானிகளின் பணி நேர விதிகளை விமானப் போக்குவரத்து இயக்குநரகம் (டிஜிசிஏ) தளா்த்தியது.
இந்த விவகாரம் தொடா்பாக இண்டிகோ தலைமைச் செயல் அதிகாரி (சிஇஓ) பீட்டா் எல்பா்ஸுக்கு விமானப் போக்குவரத்து இயக்குநரகம் (டிஜிசிஏ) நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
அந்த நோட்டீஸில், நம்பகமான விமான சேவைக்கு உரிய நேரத்தில் ஏற்பாடுகளை செய்வதிலும், பயணிகளுக்குத் தேவையான வசதிகள் கிடைப்பதை உறுதி செய்வதிலும் பீட்டா் கடமை தவறிவிட்டதாக தெரிவித்துள்ளது. விமான சேவையில் ஏற்பட்ட குளறுபடிகள் குறித்து அவா் 24 மணி நேரத்தில் விளக்கம் அளிக்க வேண்டும் என்றும் டிஜிசிஏ கோரியுள்ளது.

