

புது தில்லி: வந்தே மாதரத்தின் பெருமையை பறைசாற்ற நமக்கு ஒரு வாய்ப்பு கிடைத்துள்ளது என்று பிரதமர் நரேந்திர மோடி மக்களவையில் உரையாற்றினார்.
மேலும், வந்தே மாதம் சுதந்திரப் போராட்டத்துக்கு உத்வேகம் அளித்தது என்றும் வந்தே மாதரம் இயற்றப்பட்டபோது, நாடு அடிமைச்சங்கிலியில் சிக்கியிருந்தது என்றும் கூறினார்.
நாட்டின் தேசியப் பாடலான வந்தே மாதரம் இயற்றப்பட்டதன் 150-ஆவது ஆண்டு கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக, மக்களவையில் 10 மணி நேர சிறப்பு விவாதத்தை திங்கள்கிழமை முற்பகல் 12 மணிக்கு, பிரதமா் நரேந்திர மோடி தொடக்கி வைத்து உரையாற்றி வருகிறார்.
அவர் ஆற்றிவரும் உரையில், வந்தே மாதரத்தின் 150வது ஆண்டு விழாவில் பங்கேற்பது அனைவருக்கும் பெருமை. 150 ஆண்டுகளுக்கு முன்பு வந்தே மாதரம் என்று கூறியவர்களை சிறையில் அடைத்தனர். வருங்கால சந்ததிகளுக்கும் வந்தே மாதரம் வழிகாட்டியாக அமைந்துள்ளது.
சர்தார் வல்லபாய் படேல், பகவான் பிர்சா முண்டா ஆகியோரின் 150வது ஆண்டு விழாவையும் நாம் கொண்டாடுகிறோம். வந்தே மாதம் இயற்றப்பட்டு 150 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில், அதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தி இன்று விவாதம் நடைபெறுகிறது. தாய்நாடடை மீட்பதற்கான கருவியாகத் திகழ்ந்தது வந்தே மாதரம்.
2047ஆம் ஆண்டில், இந்தியா வளர்ச்சியடைந்த நாடாக உருவாக வந்தே மாதரம் நம்மை ஊக்குவக்கும். வந்தே மாதரம் வெறும் அரசியல் முழக்கம் மட்டுமல்ல, அது தாய்நாட்டின் சுதந்திரத்துக்காக உயிரையும் துச்சமாக மதித்து தூய்மையாகப் போராடியவர்களின் உணர்வு.
இங்கு ஆளுங்கட்சிகளோ எதிர்க்கட்சிகளோ என்று இல்லை. வந்தே மாதரத்தின் பெருமையை கூட்டாகப் பாராட்டவும் ஏற்றுக்கொள்ளவும்தான் நாம் இங்கு இருக்கிறோம். இந்தப் பாடலால்தான் நாம் அனைவரும் இங்கே ஒன்றாக இருக்கிறோம். வந்தே மாதரத்தின் பெருமையை நாம் அனைவரும் ஒப்புக்கொள்ள இது ஒரு புனிதமான சந்தர்ப்பம்.
இந்த பாடல்தான், வடக்கிலிருந்து தெற்காகவும், கிழக்கிலிருந்து மேற்கு வரையிலும் நாட்டை ஒன்றிணைத்தது. மீண்டும் ஒன்றிணைந்து அனைவரும் ஒற்றுமையாக இணைந்து பயணிக்க வேண்டிய நேரம் மீண்டும் வந்துவிட்டது. இந்தப் பாடல் நமது சுதந்திரப் போராட்ட வீரர்களின் கனவுகளை நிறைவேற்ற நம்மை ஊக்குவிக்கவும், உற்சாகப்படுத்தவும் வேண்டும். 2047க்குள் நமது நாட்டை தன்னிறைவு பெற்ற, வளர்ச்சியடைந்த நாடாக மாற்றுவதற்கான உறுதியை மீண்டும் வலியுறுத்துகிறது என்று பிரதமர் மோடி கூறினார்.
வந்தே மாதரம்
கடந்த 1875-ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 7-ஆம் தேதி அட்சய நவமி நாளில் பங்கிம் சந்திர சட்டா்ஜியால் இயற்றப்பட்டது. ‘வங்க தரிசனம்’ இலக்கிய இதழில், சட்டா்ஜியின் ‘ஆனந்தமடம்’ நாவலின் ஒரு பகுதியாக இந்தப் பாடல் முதல் முறையாக வெளியாகியிருந்தது.
கடந்த 1896-இல் கொல்கத்தா காங்கிரஸ் மாநாட்டில் ரவீந்திரநாத் தாகூா் பாடிய பின்னா் வந்தே மாதரம் பாடல் பிரபலமடைந்தது. கடந்த 1950, ஜனவரி 24-இல் அரசியல் நிா்ணய சபையால் நாட்டின் தேசியப் பாடலாக முறைப்படி ஏற்கப்பட்டது.
இப்பாடல் இயற்றப்பட்டு 150 ஆண்டுகள் நிறைவடைந்ததையொட்டி, ஓராண்டு கால கொண்டாட்டங்களை பிரதமா் மோடி கடந்த நவ. 7-இல் தொடங்கிவைத்திருந்தார்.
இதன் ஒரு பகுதியாக, நடப்பு குளிா்கால கூட்டத் தொடரில் இரு அவைகளிலும் வந்தே மாதரம் குறித்த சிறப்பு விவாதம் நடைபெறுகிறது. மக்களவையில் இன்று பிரதமர் நரேந்தரி மோடி விவாதத்தைத் தொடக்கி வைத்து உரையாற்றி வரும் நிலையில், மாநிலங்களவையில் மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா செவ்வாய்க்கிழமை ‘வந்தே மாதரம்’ விவாதத்தை தொடங்கிவைக்கவுள்ளாா்.
இந்த விவாதம் மூலம், வந்தே மாதரம் பாடல் குறித்த பல முக்கிய மற்றும் மக்கள் அறிந்திடாத தகவல்கள் வெளியுலகுக்குத் தெரியவரும் என எதிா்பாா்க்கப்படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.