

வந்தே மாதரத்தை காங்கிரஸ் கட்சித் தலைவர்கள் தொடர்ந்து புறக்கணித்து வருவதாக பிரதமர் நரேந்திர மோடி திங்கள்கிழமை விமர்சித்தார்.
தேசியப் பாடலான வந்தே மாதரம் 150 ஆண்டுகளை நிறைவு செய்திருப்பதை கொண்டாடும் வகையில் மக்களவையில் இன்று வந்தே மாதரம் குறித்த விவாதத்தைத் தொடக்கி வைத்து பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றினார்.
அப்போது, மறைந்த காங்கிரஸ் கட்சித் தலைவரும் நாட்டின் முதல் பிரதமருமான ஜவஹர்லால் நேரு மற்றும் தற்போதைய எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியையும் கடுமையாக மோடி விமர்சித்தார்.
மோடி பேசியதாவது:
”நாடாளுமன்றத்தில் முக்கியமான விவாதம் நடந்து கொண்டிருக்கிறது, ஆனால் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி அவையில் இல்லை. முதலில் நேரு, தற்போது ராகுல் காந்தி, வந்தே மாதரத்தை புறக்கணித்துள்ளார்.
காங்கிரஸ் வந்தே மாதரத்தில் சமரசம் செய்து கொண்டு முஸ்லிம் லீக் முன் சரணடைந்தது. வந்தே மாதரத்தை துண்டுதுண்டாக்கினார் நேரு.” எனத் தெரிவித்தார்.
மேலும், ”வந்தே மாதரம் முஸ்லிம்களைத் தூண்டிவிடும்” என்று நேதாஜி சுபாஷ் சந்திர போஸுக்கு நேரு எழுதிய கடிதத்தை நினைவுகூர்ந்த மோடி, ”வந்தே மாதரத்திற்கு துரோகம் இழைக்கப்பட்டது, தேசியப் பாடல் அவமதிக்கப்பட்டது” என்றார்.
தொடர்ந்து பேசிய மோடி, “வந்தே மாதரம் நமது சுதந்திர இயக்கத்தின் குரலாக மாறியது. அது நாட்டில் உள்ள அனைவரையும் ஒருங்கிணைத்து ஒவ்வொரு இந்தியரின் உறுதிமொழியாகவும் மாறியது.
'வந்தே மாதரம் என்ற வார்த்தை சுயநலத்தின் தியாகம்', 'வந்தே மாதரம் என்ற வார்த்தை துணிச்சல் உடையவர்களின் பெருமை'” எனத் தெரிவித்தார்.
இதனிடையே, நாடாளுமன்றத்தில் இருந்து வெளியேறிய ராகுல் காந்தியிடம், வந்தே மாதரம் விவாதத்தில் கலந்துகொள்ளாதது குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, “பிரியங்கா காந்தியின் உரையைக் கேளுங்கள்” என்று பதிலளித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.