

மலையாள நடிகை பாலியல் வன்கொடுமை வழக்கில் இன்று பரபரப்புத் தீர்வு வெளியாகியிருக்கும் நிலையில், ஆதாரங்கள் இல்லை என்று விடுவிக்கப்பட்ட நடிகர் திலீப் கைதானதன் பின்னணி வெளியாகியிருக்கிறது.
கேரளத்தைச் சேர்ந்த முன்னணி நடிகை கடந்த 2017ஆம் ஆண்டில் ஓடும் காரில் பாலியல் வன்கொடுமை செய்து, அதனை விடியோ பதிவு செய்ததாகக் குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வந்தது.
முதலில் நடிகை பாலியல் வன்கொடுமை வழக்காக இருந்தது, முக்கியக் குற்றவாளி, நடிகர் திலீப்புக்கு எழுதிய கடிதத்தின் மூலம், நடிகரும் விசாரணை வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டிருந்தார்.
இந்த சம்பவத்தில் நடிகர் திலீப் தூண்டுதலின்பேரிலேயே குற்றம் நடந்ததாகக் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டிருந்தது. தொடர்ந்து நடந்து வந்த விசாரணை நிறைவு பெற்று, இன்று பிறப்பிக்கப்பட்ட தீர்ப்பில், போதிய ஆதாரங்கள் இல்லை என்று கூறி நடிகர் திலீப், அவரது நண்பர் சரத் ஆகியோர் விடுதலை செய்யப்பட்டனர்.
இதில் முக்கிய குற்றவாளியாக, நடிகையின் உதவியாளர் பல்சர் சுனி கைது செய்யப்பட்டு, இன்று அவர் உள்பட ஆறு பேர் குற்றவாளிகள் என தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.
இந்த வழக்கில், முக்கிய குற்றவாளி சுனி எழுதியதாகக் கூறப்படும் கடிதம் ஒன்று, நடிகர் திலீப் கைது செய்யக் காரணமாக இருந்துள்ளது. நடிகை பாலியல் வன்கொடுமை வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் இருந்த சுனி, திலீப்புக்கு கடிதம் ஒன்றை எழுதியிருக்கிறார்.
அந்தக் கடிதம், மலையாளத்தில் எழுதப்பட்டிருந்தது. அப்போது, சிறைத் துறையின் முத்திரையுடன் ஊடகங்களில் வெளியாகியிருந்தது. அந்தக் கடிதத்தில், திலீப் அண்ணா, நான் சுனி, இந்தக் கடிதத்தை சிறையில் இருந்து எழுதுகிறேன், மிகப் பெரிய சவால்களுக்கு இடையே இந்தக் கடிதத்தை எழுதியிருக்கிறேன். இந்தக் கடிதத்தை உங்களிடம் கொண்டு வரும் நபருக்கு இந்த வழக்குத் தொடர்பாக எதுவும் தெரியாது. இதனை அவர் எனக்காக மட்டும் செய்கிறார்.
இந்த வழக்கில் என் பெயர் சேர்க்கப்பட்டதிலிருந்தே, என் வாழ்க்கையே வீணாகிப்போய்விட்டதைப் போல உணர்கிறேன். நான் என்னைப் பற்றிக் கூட கவலைப்படவில்லை. ஆனால், எனக்காக, என்னை நம்பி வேலை செய்த ஐந்து பேரை காப்பாற்ற வேண்டும் என்று நினைக்கிறேன். எல்லோரும் என்னிடம் கேட்கிறார்கள், ஏன் நீ பலியாடு ஆகிறாய் என்று. என்னை இதைச் செய்ய வைத்தவரின் பெயரை நான் சொல்லிவிட்டால், அந்த நடிகை கூட என்னை மன்னித்துவிடுவார் என்று கூறுகிறார்கள்.
அந்த நடிகை தரப்பிலும், உங்களது எதிரிகளும் தொடர்ந்து என்னைத் தொடர்பு கொண்டு வருகிறார்கள். குறைந்தபட்சம் எனது நிலையை அறிந்துகொள்ள ஒரு வழக்குரைஞரையாவது அனுப்பியிருக்கலாம். ஆனால் அதைக் கூட நீங்கள் செய்யவில்லை. உங்களை இதுவரை தொடர்புகொள்ளாதது ஏன் என்று உங்களுக்கே தெரியும்.
நான் இப்போது என்ன செய்ய வேண்டும் என்று மட்டும் சொல்லுங்கள். என்னை நீங்கள் நண்பராகப் பார்த்தீர்களா இல்லை எதிரியாகவா? இப்போது எனக்குத் தேவை பணம். உங்களால் என்னிடம் யாரையாவது மிக எளிதாக அனுப்ப முடியும். இன்னும் மூன்று நாள்கள் நான் காத்திருக்கப்போகிறேன். அதற்குள் உங்கள் முடிவை தெரிவித்துவிடுங்கள். இப்போது இதுபோன்ற ஒரு கடிதத்தை எழுதுவதற்கான அவசியத்தை உணர்ந்திருப்பீர்கள். நதீர்ஷாவை நான் நம்பலாமா இல்லையா என்பதைச் சொல்லுங்கள் என்று எழுதியிருந்தார்.
இப்போது வரை உங்களுக்கு நம்பிக்கைக்குரியவனாக இருக்கிறேன் என்று அந்தக் கடிதத்தை முடித்திருந்தார் சுனி.
இந்த நிலையில்தான், ஜூன் 3 ஆம் தேதி, பாதிக்கப்பட்ட நடிகை, போலீசில் ஒரு வாக்குமூலம் அளித்தார், அதில் திலீப் 2012 முதல் தன் மீது பகை பாராட்டி வருகிறார் எனக் குற்றம் சாட்டினார்.
நடிகை மஞ்சு வாரியருடனான திலீப்பின் திருமண வாழ்வை நாசமாக்கியது அந்த பாதிக்கப்பட்ட நடிகைதான் என்று அவர் எல்லோரிடமும் கூறி வந்துள்ளதையும், போலீஸ் பதிவுகளின்படி, திலீப், தனக்கு எதிராக நின்ற யாரையும் விட்டதில்லை என்று மிரட்டும் தொனியில் பாதிக்கப்பட்ட பெண்ணிடம் கூறியிருந்ததாகவும் பதிவு செய்யப்பட்டிருந்தது.
இந்த நிலையில், தொடர்ந்து 8 ஆண்டுகள் நடைபெற்ற நீதிமன்ற விசாரணையில், முக்கிய குற்றவாளிகளாக பதிவு செய்யப்பட்ட ஏ1 முதல் ஏ 6 வரை குற்றவாளிகள் என்றும், ஏ8-ஆகப் பதிவு செய்யப்பட்டிருந்த திலீப்புக்கு எதிராக ஆதாரங்கள் இல்லை எனக் கூறி அவர் விடுதலை செய்யப்படுவதாகவும் நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்திருக்கிறது.
தண்டனை விவரங்கள் விரைவில் வெளியாகும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.