

சுதந்திரப் போராட்டத்தில் ஒருபோதும் பங்கேற்காதவர்களுக்கு வந்தே மாதரத்தின் முக்கியத்துவம் எப்படி புரியும்? என்று சாமஜவாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் கேள்வி எழுப்பியுள்ளார்.
தேசியப் பாடலான வந்தே மாதரம் 150 ஆண்டுகளை நிறைவு செய்திருப்பதை கொண்டாடும் வகையில் மக்களவையில் இன்று வந்தே மாதரம் குறித்த விவாதத்தைத் தொடக்கி வைத்து பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றினார்.
தொடர்ந்து, சமாஜவாதி கட்சியின் தலைவரும் எம்பியுமான அகிலேஷ் யாதவ் பேசியதாவது:
”வந்தே மாதரம் நாட்டு மக்களை ஒன்றிணைத்து சுதந்திரப் போராட்டத்துக்கு உத்வேகம் அளித்தது. நாம் நாட்டை ஒன்றிணைத்ததால் ஆங்கிலேயர்கள் அஞ்சினர். மக்கள் வந்தே மாதரத்தைப் பாடும் இடங்களில் எல்லாம் தேசத்துரோகக் குற்றம்சாட்டி சிறைக்கு அனுப்பினார்கள்.
1905 முதல் 1908 வரை இந்தப் பாடலைப் பாடத் தடை விதிக்கப்பட்டது, ஆனால் புரட்சியாளர்கள் அதை ஒருபோதும் கேட்கவில்லை. தங்கள் தலைகளிலும், இதயங்களிலும் வந்தே மாதரத்தை வைத்திருந்தனர். மக்களிடையே இயக்கத்தைப் பரப்பினர்.
தற்போதைய அரசாங்கம் எல்லாவற்றையும் சொந்தமாக்க விரும்புகிறது. தங்களிடம் இல்லாத அனைத்து பெரிய தலைவர்களையும், தங்களிடம் இல்லாத பெரிய விஷயங்களையும் சொந்தமாக்க விரும்புகிறது.
வந்தே மாதரம் என்பது வெறும் கோஷத்துக்கானது மட்டுமல்ல, கடைப்பிடிப்பதற்குமானது. சுதந்திரப் போராட்டத்தில் ஒருபோதும் பங்கேற்காதவர்கள் வந்தே மாதரத்தின் முக்கியத்துவத்தை எப்படிப் புரிந்துகொள்வார்கள்? அவர்கள் தேசியவாதிகள் அல்ல, தேசிய வெட்டிப் பேச்சாளர்கள்.” எனத் தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.