திட்டமிடலில் ஏற்பட்ட தவறுகளே இண்டிகோ விமான நிறுவனத்தின் குளறுபடிக்கு காரணம் என்று மாநிலங்களவையில் மத்திய சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் ராம் மோகன் நாயுடு திங்கள்கிழமை விளக்கம் அளித்துள்ளார்.
விமானிகளுக்கான திருத்தப்பட்ட பணி நேரக் கட்டுப்பாட்டு விதிகள் (எஃப்டிடிஎல்) அமலுக்கு கொண்டுவரப்பட்டதை தொடர்ந்து, கடந்த ஒரு வாரமாக இண்டிகோ நிறுவனத்தின் ஆயிரக்கணக்கான விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
இதுதொடர்பாக மாநிலங்களவையில் எம்பிக்கள் எழுப்பிய கேள்விகளுக்கு மத்திய அமைச்சர் ராம் மோகன் நாயுடு இன்று பதில் அளித்து பேசினார்.
அவர் பேசியதாவது:
“இண்டிகோ நிறுவனத்தின் விமானிகள் மற்றும் விமானப் பணியாளர்களின் அட்டவணை மற்றும் உள்திட்டமிடலில் ஏற்பட்ட தவறுகளே குளறுபடிக்கு காரணம்.
கடந்த டிசம்பர் 1 ஆம் தேதி நடைபெற்ற கூட்டத்தில் கூட, விமானிகளுக்கான திருத்தப்பட்ட பணி நேரக் கட்டுப்பாட்டு விதிகள் தொடர்பாக எவ்வித ஆட்சேபனையும் இண்டிகோ நிறுவனம் தெரிவிக்கவில்லை.
விமானப் போக்குவரத்து துறையில் அதிகமான நிறுவனங்கள் வர வேண்டும் என்று நான் விரும்புகிறேன். இந்தியாவில் தற்போது 5 பெரிய நிறுவனங்கள் மட்டுமே உள்ளன. அதுவும் அமைச்சகம் தரப்பில் மேற்கொண்ட முயற்சியின் விளைவாகும்.
தாமதங்கள் மற்றும் ரத்துகளால் சிரமப்பட்ட அனைத்து பயணிகளுக்கும் உதவ கடுமையான சிவில் விமானப் போக்குவரத்து தேவை விதிகள் உள்ளன. இதனை விமான நிறுவனங்கள் கட்டாயம் பின்பற்ற வேண்டும்.
மென்பொருள் பிரச்னை குறித்து விசாரணை நடத்தப்பட்டுள்ளது. விமானப் போக்குவரத்து துறையில் தொடர்ச்சியாக தொழில்நுட்ப மேம்பாடு நடந்து வருகிறது. நாட்டின் விமானப் போக்குவரத்துத் துறை உலகத் தரம் வாய்ந்த உயர்ந்த தரநிலைகளை கொண்டு வருவதே அரசின் தொலைநோக்குப் பார்வை.
கடந்த 3 நாள்களில் மட்டும் 5,86,705 இண்டிகோ பயணிகளுக்கு அவர்களின் பயணச்சீட்டுத் தொகையான ரூ. 569 கோடி திருப்பி அளிக்கப்பட்டுள்ளது.” எனத் தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.