

பறக்கத் தயாரான இண்டிகோ விமானத்துக்குள் புறா நுழைந்த காணொலி இணையத்தில் வைரலாக பரவி வருகின்றது.
இண்டிகோ நிறுவனத்தின் நூற்றுக்கணக்கான விமானங்கள் கடந்த ஒரு வாரத்துக்கு மேலாக ரத்து செய்யப்பட்டுள்ளதால் பயணிகள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.
இந்த நிலையில், பெங்களூருவில் இருந்து வதோதராவுக்கு புறப்படத் தயாரான இண்டிகோ விமானத்துக்குள் புறா பறக்கும் விடியோ இணையத்தில் வைரலாகி வருகின்றது.
விமானத்தில் இருந்த பயணிகளில் சிலரும், ஊழியர்களும் புறாவைப் பிடிக்க முயற்சிக்கும் காட்சிகளும், விமானத்தைவிட்டு வெளியேறுவதற்கு வழிதேடி அங்குமிங்கும் பறக்கும் புறாவின் காட்சிகளும் வைரலாகி வருகின்றன.
இந்த விடியோவை விமானத்தில் பயணித்த பயணி ஒருவர் செல்போனில் விடியோ பதிவு செய்து, அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ‘சிறப்பு விருந்தினர்’ என்று குறிப்பிட்டு வெளியிட்டுள்ளார்.
தற்போது வைரலாகப் பகிரப்பட்டு வரும் இந்த விடியோவுக்கு கீழ், இண்டிகோவுக்கு மோசமான காலம் என்றும், சோதனை மேல் சோதனை வருவதாகவும் கமெண்ட் செய்துள்ளனர்.
விமானிகளுக்கான திருத்தப்பட்ட பணி நேரக் கட்டுப்பாட்டு விதிகளை (எஃப்டிடிஎல்) மத்திய அரசு அமல்படுத்திய நிலையில், இண்டிகோ நிறுவனத்தில் விமானிகள் பற்றாக்குறை ஏற்பட்டு, கடந்த சில நாள்களாக அன்றாட விமான சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன.
இதைத் தொடா்ந்து, விமான சேவைகளை சீா்செய்ய அவசர நடவடிக்கையாக விமானிகளின் பணி நேர விதிகளை விமானப் போக்குவரத்து இயக்குநரகம் (டிஜிசிஏ) தளா்த்தியது.
கடந்த ஒரு வாரத்தில் செய்யப்பட்ட விமான ரத்து மற்றும் தாமதம் காரணமாக பயணிகளுக்கு சுமார் ரூ. 610 கோடி பயணச்சீட்டுக்கான பணத்தை இண்டிகோ நிறுவனம் திருப்பி அளித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.