மத்திய அரசின் தலைமை தகவல் ஆணையர் மற்றும் தகவல் ஆணையர்களைத் தேர்வு செய்வது தொடர்பாக பிரதமர் மோடி மற்றும் மத்திய அமைச்சர் அமித் ஷாவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி சந்தித்துப் பேசியுள்ளார்.
நாட்டில் தலைமை தகவல் ஆணையர் மற்றும் தகவல் ஆணையர்களைத் தேர்வு செய்யும் குழுவில் பிரதமர் மோடி, அமித் ஷா, எதிர்க்கட்சித் தலைவர் என்ற முறையில் ராகுல் காந்தி உள்ளிட்டோர் இடம்பெற்றுள்ளனர்.
இந்நிலையில் புதிய தலைமை தகவல் ஆணையரைத் தேர்வு செய்யும்பொருட்டும் காலியாக உள்ள 8 தகவல் ஆணையர்களின் இடங்களை நிரப்பும் பொருட்டும் இந்த குழுவின் ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றுள்ளது.
மேலும் மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையத்தின் தலைவரைத் தேர்வு செய்வது குறித்தும் இந்த கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டுள்ளது.
நாடாளுமன்ற வளாகத்தில் பிரதமர் நரேந்திர மோடியின் அறையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் பிரதமர் மோடி, அமித் ஷாவுடன் ராகுல் காந்தியும் கலந்துகொண்டுள்ளார்.
பிரதமர் மோடி தலைமையிலான பாஜக அரசு சிலரது பெயர்களை பரிந்துரை செய்ததாகவும் அதற்கு ராகுல் காந்தி தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டதாகவும் சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக இந்த கூட்டம் நடைபெற்றதாகவும் கூறப்படுகிறது.
தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் பிரிவு 12 (3) இன் கீழ் தலைமை தகவல் ஆணையர் மற்றும் தகவல் ஆணையர்கள் பிரதமர் தலைமையிலான இந்த குழுவால் நியமனம் செய்யப்படுகின்றனர். தற்போது 10 தகவல் ஆணையர்களில் இருவர் மட்டுமே உள்ளதும் மற்ற 8 இடங்கள் காலியாக இருப்பதும் குறிப்பிடத்தக்கது.
தகவல் அறியும் உரிமை தொடர்பான புகார்கள் இவர்களால் கண்காணிக்கப்படுகின்றன. தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் 30,838 புகார்கள் இன்னும் நிலுவையில் உள்ளதாகத் தரவுகள் தெரிவிக்கின்றன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.