ராகுலின் கேள்விக்கு பாஜகவும் மோடியும் இன்னும் பதில் அளிக்கவில்லை! - காங்கிரஸ் எம்.பி.

ராகுல் காந்தி பற்றிய விமர்சனங்களுக்கு காங்கிரஸ் எம்.பி. கௌரவ் கோகோய் பதில்..
Gaurav Gogoi
vIANS
Updated on
1 min read

தேர்தல் சீர்திருத்தம் தொடர்பாக மக்களவையில் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி நேற்று எழுப்பிய கேள்விக்கு பாஜகவிடமும் பிரதமர் மோடியிடமும் இன்னும் பதில் இல்லை என்று காங்கிரஸ் எம்.பி. கௌரவ் கோகோய் கூறியுள்ளார்.

தேர்தல் சீர்திருத்தம் மற்றும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம்(எஸ்ஐஆர்) குறித்து நாடாளுமன்றத்தில் இன்றும் விவாதம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

நேற்று மக்களவையில் பேசிய எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, நாட்டின் அனைத்து அமைப்புகளையும் ஆர்எஸ்எஸ் கைப்பற்றுவதாகவும் தேர்தல் ஆணையத்தையும் கைப்பற்றி வாக்குத்திருட்டில் ஈடுபட்டு வருவதாகவும் குற்றம்சாட்டியதுடன் பாஜக அரசுக்கு பல்வேறு கேள்விகளை எழுப்பினார்.

இதனிடையே, அவர் இந்திய காங்கிரஸின் அயலக அணி நடத்தும் நிகழ்வில் கலந்துகொள்வதற்காக வருகிற டிச. 15 ஆம் தேதி ஜெர்மனியின் பெர்லின் நகருக்கு பயணம் மேற்கொள்ளவுள்ளார்.

குளிர்காலக் கூட்டத்தொடருக்கு மத்தியில் ஜெர்மனிக்கு பயணம் மேற்கொள்ளவிருக்கும் ராகுல் காந்தியை பாஜக விமர்சித்து வருகிறது.

ஒரு எதிர்க்கட்சித் தலைவர் என்ற முறையில் காங்கிரஸ் கட்சி நிகழ்ச்சியில் கலந்துகொள்ள ராகுல் செல்வது அவரின் உரிமை என்றும் பிரதமர் மோடி பல்வேறு நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும்போது பாஜகவினர் ஏன் கேள்வி எழுப்புவதில்லை என்று காங்கிரஸ் கட்சியினர் கூறி வருகின்றனர்.

இந்நிலையில் பாஜகவின் விமர்சங்களுக்கு பதில் அளிக்கும் விதமாக காங்கிரஸ் எம்.பி. கௌரவ் கோகோய்,

"எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி நேற்று எழுப்பிய கேள்விக்கு பாஜகவிடமும் பிரதமர் மோடியிடமும் இன்னும் பதில் இல்லை.

தேர்தல் ஆணைய விதிகளில் வாக்குச்சாவடி சிசிடிவி காட்சிகளை 45 நாள்களில் அழிக்க வேண்டும் என்ற சட்டம் கொண்டு வரப்பட்டது ஏன்? இயந்திரத்தால் செயல்படக்கூடிய வாக்காளர் பட்டியலை பாஜக அரசு ஏன் வெளியிட விரும்பவில்லை? உள்ளிட்ட பிரச்னைகளை ராகுல் காந்தி அடுக்கினார். அதுகுறித்து பாஜக அரசு இன்னும் எந்த பதிலையும் அளிக்கவில்லை.

ஜனநாயகம் ஆபத்தில் உள்ளது. ராகுல் காந்தியின் கேள்விகளுக்கு பாஜகவிடம் பதில் இல்லாதபோது, ​​அவர்களின் ஒரே வழி குழப்பத்தை ஏற்படுத்தி அவரது நற்பெயருக்கு களங்கம் விளைவிப்பது. அவர்கள் இந்த வேலையைத் தொடர்ந்து செய்வார்கள்.

அதேநேரம், அரசியலமைப்பின் பாதுகாப்பு மற்றும் சாமானிய மக்களின் வாக்குகளின் பாதுகாப்பிற்காக ராகுல் காந்தியும் காங்கிரஸும் தொடர்ந்து குரல் எழுப்புவார்கள்" என்று தெரிவித்தார்.

Summary

Congress MP Gaurav Gogoi says that BJP, PM Modi do not have answer to the question raised by Rahul Gandhi

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com