வாக்குத் திருட்டுதான் மிகப்பெரிய தேச விரோதச் செயல் என எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி பேசியுள்ளார்.
மக்களவையில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிரத் திருத்தம் தொடர்பான விவாதத்தில் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி உரையாற்றினார்.
அவர் பேசியதாவது,
"1948 ஜனவரி 30 அன்று மகாத்மா காந்தியின் மார்பில் மூன்று தோட்டாக்கள் துளைத்தன. நாதுராம் கோட்சே தேசப்பிதாவை படுகொலை செய்தார். ஆனால் அவர்களின் திட்டம் அத்துடன் முடியவில்லை. எல்லாமே மக்களின் வாக்குகளில் இருந்து வெளிப்பட்டதுதான். அங்கிருந்து அனைத்து நிறுவனங்களையும் ஆர்எஸ்எஸ் கைப்பற்றி வருகிறது. இப்போது தேர்தல் ஆணையத்தையும் ஆர்எஸ்எஸ் கைப்பற்றியுள்ளது. நாட்டின் நிறுவன கட்டமைப்பைக் கைப்பற்றுவதே ஆர்எஸ்எஸ்ஸின் திட்டமாகும். அது இந்த ஜனநாயகத்தை அழிக்க நினைக்கிறது. உளவுத்துறை அமைப்புகளைத் தொடர்ந்து, சிபிஐ, அமலாக்கத் துறை, வருமான வரித் துறை என கடைசியில் தேர்தல் ஆணையத்தையும் கைப்பற்றியுள்ளது.
நம்முடைய நாடு என்பது காதி போன்றது. அந்த காதி வாக்குகளால்தான் நெய்யப்படுகிறது. நாட்டில் 140 கோடி மக்கள் இருக்கிறார்கள். நமது நாட்டின் தேர்தல் முறையை நேரடியாகக் கட்டுப்படுத்தும் தேர்தல் ஆணையம் தற்போது ஆர்எஸ்எஸ் வசம் உள்ளது.
தேர்தல்களை நடத்த, அதிகாரத்தில் உள்ளவர்களுடன் தேர்தல் ஆணையம் எவ்வாறு கூட்டாகச் செயல்படுகிறது என்பதை நான் ஆதாரமாகக் கொடுத்துள்ளேன். ஆனால் தேர்தல் ஆணையம் அதுகுறித்துப் பதிலளிக்கத் தயாராக இல்லை. ஹரியாணா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் வாக்குத் திருட்டு நடந்துள்ளது.
ஹரியாணா வாக்காளர் பட்டியலில் ஒரு பிரேசிலிய பெண் 22 முறை இடம்பெற்றுள்ளார், மேலும் ஒரு வாக்குச்சாவடியில் மற்றொரு பெண்ணின் பெயர் 200 முறை இடம்பெற்றுள்ளது. ஹரியாணா தேர்தலில் வாக்குகள் திருடப்பட்டது என்பதை நான் தெளிவாகக் காட்டியுள்ளேன். ஆனால் தேர்தல் ஆணையம் பதிலளிக்கத் தயாராக இல்லை. அந்த பெண்ணின் புகைப்படம் ஏன் வாக்காளர் பட்டியலில் இடம்பெற்றது என தெரிவிக்கவில்லை.
உத்தரபிரதேசத்தில் உள்ள ஒருவர் ஏன் ஹரியாணாவில் வந்து வாக்களிக்கிறார் என்று தேர்தல் ஆணையம் கூறவில்லை.
பிகாரில் எஸ்ஐஆர் நடவடிக்கைகளுக்குப் பிறகும் பட்டியலில் போலி வாக்காளர்கள் இடம்பெற்றுள்ளனர். அப்படியெனில் எதற்கு எஸ்ஐஆர்?
தேர்தல் சீர்திருத்தம் என்பது மிகவும் எளிமையானது. இயந்திரம் மூலமாக எளிதாகச் செய்யலாம், வாக்குப்பதிவு இயந்திரங்கள் எப்படி செயல்படுகிறது என்பது எங்களுக்கு இன்னும் தெரியவில்லை.
இந்தியா மிகப்பெரிய ஜனநாயக நாடு மட்டுமல்ல, இந்தியா சிறந்த ஜனநாயக நாடு.
தேர்தல் ஆணையரை தேர்வு செய்யும் குழுவில் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியை நீக்கியது ஏன்? தலைமை நீதிபதி மீதே நம்பிக்கை இல்லையா? அமித் ஷாவும் பிரதமர் மோடியும் தேர்தல் ஆணையரை நியமிக்க மிகுந்த ஆர்வம் காட்டுகின்றனர்.
நாட்டில் வாக்குத்திருட்டு நடக்கிறது. நீங்கள் வாக்குகளை அழித்தால் இந்த நாட்டின் கட்டுமானத்தை அழிக்கிறீர்கள். வாக்குத் திருட்டு என்பது மிகப்பெரிய தேச விரோதச் செயல். ஆளும் பாஜகவினர் அத்தகைய தேச விரோதச் செயலில் ஈடுபட்டு வருகின்றனர்" என்று பேசினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.