

மக்களவையில் நேற்று பேசும்போது அமித் ஷாவின் கைகள் பதட்டத்தில் நடுங்கியதாக எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி விமர்சித்துள்ளார்.
மக்களவையில் சிறப்பு தீவிர திருத்தம் மீதான விவாதத்தில் புதன்கிழமை கலந்துகொண்ட உள்துறை அமைச்சர் அமித் ஷா, முன்னாள் பிரதமர்கள் நேரு, இந்திரா காந்தி, காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி உள்ளிட்டோருக்கு எதிராக கடுமையான குற்றச்சாட்டுகளை வைத்து 90 நிமிடங்கள் உரையாற்றினார்.
அப்போது, காங்கிரஸ் தோல்விகளுக்கு வாக்கு இயந்திரமோ, வாக்குத் திருட்டோ காரணம் அல்ல, அவர்களின் தலைமைதான் காரணம் என்று விமர்சித்திருந்தார்.
இதனைத் தொடர்ந்து அமித் ஷாவின் பேச்சைப் புறக்கணித்து, ராகுல் காந்தி உள்பட காங்கிரஸ் மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அவையைவிட்டு வெளிநடப்பு செய்தனர்.
இந்த நிலையில், நாடாளுமன்றத்தில் வியாழக்கிழமை (இன்று) செய்தியாளர்களை சந்தித்த ராகுல் காந்தி பேசியதாவது:
“நேற்று அமித் ஷா மிகவும் பதற்றமாக இருந்தார். அவர் தவறான வர்த்தைகளைப் பயன்படுத்தினார். அவரது கைகள் நடுங்கின. அவர் கடுமையான மன அழுத்தத்தில் இருக்கிறார். இவை அனைத்தையும் நேற்று அனைவரும் பார்த்தனர்.
நான் கேட்ட கேள்விகளுக்கு அவர் நேரடியாக பதிலளிக்கவில்லை. அவர் எந்த ஆதாரங்களையும் அளிக்கவில்லை. களத்துக்கு வாருங்கள், எனது அனைத்து செய்தியாளர்கள் சந்திப்பு பற்றியும் நாடாளுமன்றத்தில் விவாதிக்கலாம் என்று நான் அவருக்கு நேரடியாக சவால் விடுத்தேன். ஆனால், எனக்கு எந்த பதிலும் வரவில்லை” என்றார்.
முன்னதாக மக்களவையில் தோ்தல் சீா்திருத்தம் தொடா்பான விவாததத்தில் ராகுல் காந்தி பேசுகையில்,
“தலைமைத் தோ்தல் ஆணையா், இரண்டு தோ்தல் ஆணையா்களைத் தெரிவு செய்யும் தோ்வுக் குழுவில் இருந்து உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி நீக்கப்பட்டது ஏன்?
குறிப்பிட்ட நபா்தான் தோ்தல் ஆணையராக வரவேண்டும் என்பதில் பிரதமா் நரேந்திர மோடியும், மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷாவும் மிகுந்த ஆா்வத்தைக் காட்டுவது ஏன்?
தோ்தல் ஆணையராகப் பதவியில் இருக்கும்போது மேற்கொள்ளும் தவறான நடவடிக்கைகளுக்காக தோ்தல் ஆணையா்கள் தண்டிக்கப்படாத வகையில் சட்டத்தில் மாற்றம் செய்து, இதுவரை எந்தப் பிரதமரும் செய்யாத வரலாற்றை கடந்த 2023-ஆம் ஆண்டு டிசம்பரில் மத்திய அரசு செய்தது. தோ்தல் ஆணையருக்கு இந்த அளவுக்கு சட்டப் பாதுகாப்பை பிரதமரும், மத்திய உள்துறை அமைச்சரும் அளித்தது ஏன்? என்ற மூன்று முக்கியக் கேள்விகளை முன்வைத்தாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.