கேரளத்தில் இன்று 2-ம் கட்டமாக நடைபெறும் உள்ளாட்சித் தேர்தலில் முதல்வர் பினராயி விஜயன் வாக்களித்தார்.
கேரளத்தில் முதல் கட்டமாக திருவனந்தபுரம், கொல்லம், பத்தனம்திட்டா, கோட்டயம், இடுக்கி, ஆலப்புழா, எர்ணாகுளம் ஆகிய 7 மாவட்டங்களில் உள்ள பஞ்சாயத்துகளுக்கு டிச. 9 ஆம் தேதி உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்றது. இதில்70.9% வாக்குகள் பதிவாகின.
தொடர்ந்து இன்று (டிச. 11) திருச்சூர், மலப்புரம், வயநாடு, பாலக்காடு, கண்ணூர், காசர்கோடு, கோழிக்கோடு ஆகிய மாவட்டங்களில் உள்ள உள்ளாட்சி அமைப்புகளுக்கு காலை 7 மணிக்குத் தொடங்கி வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும். 604 உள்ளாட்சி அமைப்புகளில் உள்ள 12931 வார்டுகளில் 1.53 கோடி வாக்காளர்கள் வாக்களிக்கின்றனர்.
இதில் கண்ணூர் மாவட்டத்தில் பினராயி கிராம பஞ்சாயத்தில் செரிகல் ஜூனியர் பள்ளியில் முதல்வர் பினராயி விஜயன் தனது வாக்கினைப் பதிவு செய்தார். அவரது குடும்பத்தினரும் அந்த வாக்குச்சாவடியில் வாக்களித்தனர்.
இதன்பின்னர் செய்தியாளர்களுடன் பேசிய முதல்வர் பினராயி விஜயன்,
"ஐக்கிய முற்போக்கு முன்னணி(காங்கிரஸ் கூட்டணி)யின் கோட்டைகளாகக் கருதப்படும் இடங்களில்கூட இடது ஜனநாயக முன்னணி(மார்க்சிஸ்ட் கம்யூ. கூட்டணி)யை மக்கள் ஏற்றுக்கொள்கிறார்கள். சபரிமலை விவகாரம் எதையும் பாதிக்காது. அரசு சரியான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதற்கு பக்தர்களின் முழு ஆதரவும் உண்டு. இந்த விஷயத்தில் பாஜகவும் காங்கிரஸ் கூட்டணியும் ஒரே மாதிரி செயல்படுகிறார்கள்" என்று தெரிவித்தார்.
மொத்தமுள்ள 1,199 உள்ளாட்சி அமைப்புகளுக்கு வாக்கு எண்ணிக்கை டிச. 13 ஆம் தேதி நடைபெறுகிறது. கேரளத்தில் அடுத்தாண்டு சட்டப்பேரவைத் தேர்தலும் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.