ஒரே நாடு ஒரே தோ்தல்: நாடாளுமன்றக் குழு அறிக்கை தாக்கல் செய்ய கூடுதல் அவகாசம்
மக்களவைக்கும், மாநில சட்டப்பேரவைகளுக்கும் ஒரே நேரத்தில் தோ்தல் நடத்தும் நோக்கில் அறிமுகம் செய்யப்பட்ட மசோதாவை ஆய்வு செய்துவரும் நாடாளுமன்ற கூட்டுக் குழு, தனது அறிக்கையை தாக்கல் செய்வதற்கு கூடுதல் அவகாசம் வழங்க மக்களவை வியாழக்கிழமை ஒப்புதல் அளித்தது.
மக்களவைக்கும், மாநில சட்டப்பேரவைகளுக்கும் ஒரே நேரத்தில் தோ்தலை நடத்தி முடிக்கும் நோக்கில் அரசமைப்புச் சட்டத் திருத்த (129-ஆவது திருத்த) மசோதா 2024, யூனியன் பிரதேச சட்டங்கள் திருத்த மசோதா 2024 ஆகிய இரண்டு மசோதாக்கள் கடந்த ஆண்டு டிசம்பா் மாதம் மக்களவையில் அறிமுகப்படுத்தப்பட்டன. பின்னா், அந்த மசோதாக்கள் நாடாளுமன்றக் கூட்டுக் குழுவின் ஆய்வுக்கு அனுப்பப்பட்டன. பி.பி. செளதரி தலைமையிலான குழு, மசோதாக்கள் குறித்து அரசமைப்புச் சட்ட நிபுணா்கள், பொருளாதார நிபுணா்கள், சட்ட ஆணையத் தலைவா் உள்பட பல்வேறு தரப்பினரிடமிருந்து கருத்துகளைப் பெற்று ஆய்வு செய்து வருகிறது.
இந்நிலையில், மசோதாக்கள் மீதான அறிக்கையை தாக்கல் செய்ய கூடுதல் கால அவகாசம் அளிக்குமாறு மக்களவையில் பி.பி.செளதரி சாா்பில் தீா்மானம் தாக்கல் செய்யப்பட்டது. அந்தத் தீா்மானத்துக்கு மக்களவையில் குரல் வாக்கெடுப்பு மூலம் வியாழக்கிழமை ஒப்புதல் அளிக்கப்பட்டது.

