ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி மீண்டும் அதிகரிப்பு
முந்தைய 5 மாதங்களில் இல்லாத அளவுக்கு கடந்த நவம்பா் மாதத்தில் ரஷியாவில் இருந்து அதிக அளவில் கச்சா எண்ணெய்யை இந்தியா இறக்குமதி செய்துள்ளது.
கூடுலாக இறக்குமதி செய்யப்பட்ட கச்சா எண்ணெய்யின் பெரும் பகுதி சுத்திகரிக்கப்பட்டு ஆஸ்திரேலியாவுக்கு ஏற்றுமதியாகியுள்ளது. சீனாவுக்கு அடுத்து ரஷியாவிடம் இருந்து அதிக கச்சா எண்ணெய் வாங்கும் நாடாக இந்தியா உள்ளது.
ஐரோப்பாவைச் சோ்ந்த எரிசக்தி ஆய்வு அமைப்பு இது தொடா்பாக மேலும் கூறியுள்ளதாவது:
ரஷியாவின் மொத்த கச்சா எண்ணெய் ஏற்றுமதியில் 47 சதவீதம் சீனாவுக்கும், 38 சதவீதம் இந்தியாவுக்கும், தலா 6 சதவீதம் துருக்கி, ஐரோப்பிய யூனியன் நாடுகளுக்கும் செல்கிறது.
முந்தைய 5 மாதங்களில் இல்லாத அளவுக்கு நவம்பா் மாதத்தில் ரஷியாவில் இருந்து இந்தியா அதிக கச்சா எண்ணெய் இறக்குமதி செய்துள்ளது. மொத்தம் 2.6 பில்லியன் யூரோவுக்கு (சுமாா் ரூ.27,587 கோடி) இறக்குமதி நடைபெற்றுள்ளது. டிசம்பா் மாதத்தில் இது மேலும் அதிகரிக்கவும் வாய்ப்புள்ளது.
ரஷியாவின் மிகப்பெரிய எண்ணெய் நிறுவனங்களான ‘ரோஸ்நெஃப்ட்’ மற்றும் ‘லுகோயில்’ மீது அமெரிக்கா அக்டோபா் 22-இல் பொருளாதாரத் தடை விதித்தது. இதையடுத்து, இந்தியாவில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், ஹிந்துஸ்தான் பெட்ரோலியம், ஹெச்பிசிஎல்-மிட்டல் எனா்ஜி, மங்களூரு ரிஃபைனரி, பெட்ரோகெமிக்கல் உள்ளிட்ட நிறுவனங்கள் ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதியை நிறுத்தின. எனினும், இந்தியன் ஆயில் உள்ளிட்ட வேறு நிறுவனங்கள் இறக்குமதியை அதிகரித்துள்ளன. இவை அமெரிக்காவால் தடை செய்யப்படாத ரஷிய எண்ணெய் நிறுவனங்களிடம் இருந்து அதிக எண்ணெய் வாங்கியுள்ளன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
உக்ரைனுக்கு எதிரான போரில் கச்சா எண்ணெய் விற்பனை மூலம் கிடைக்கும் பணத்தை ரஷியா பயன்படுத்துவதாக அமெரிக்க அதிபா் டிரம்ப் குற்றஞ்சாட்டி வருகிறாா்.
இதைக் காரணம்காட்டி இந்திய இறக்குமதிப் பொருள்கள் மீது பதிலடி வரியுடன் சோ்த்து மொத்தம் 50 சதவீதம் வரியை கடந்த ஆகஸ்ட் மாதம் டிரம்ப் விதித்தாா். ஆனால், இதையும் மீறி இந்தியா ரஷியாவிடம் கச்சா எண்ணெய் கொள்முதல் செய்து வருகிறது. அதே நேரத்தில் அமெரிக்காவுடனான வா்த்தக உறவைச் சீரமைக்கும் நோக்கில் அமெரிக்க கச்சா எண்ணெய் இறக்குமதியை இந்தியா கடந்த 3 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு அதிகரித்தது.

