

அருணாசல பிரதேசத்தில் இந்திய-சீன எல்லை அருகே பள்ளத்தாக்கில் லாரி கவிழ்ந்த இடத்தில் இருந்து சனிக்கிழமை மேலும் 11 உடல்கள் மீட்கப்பட்டன.
இதுகுறித்து அஞ்சாவ் மாவட்ட துணை ஆணையர் மிலோ கோஜின் கூறுகையில், பள்ளத்தாக்கு மிகவும் ஆழமாக இருப்பதால் மீட்பு நடவடிக்கை மிகவும் கடினமாக இருந்தது. குறைந்த தெரிவுநிலை காரணமாக மாலை 4 மணியளவில் இந்த நடவடிக்கை இடைநிறுத்தப்பட்டு ஞாயிற்றுக்கிழமை காலை மீண்டும் தொடங்கும்.
ஒருவர் இன்னும் காணவில்லை, நாளை தேடுதல் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். விபத்து நிகழ்ந்த இடத்தில் இருந்து சனிக்கிழமை மேலும் 11 உடல்கள் மீட்கப்பட்டன. இதன் மூலம், இதுவரை 17 உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. ஞாயிற்றுக்கிழமை மேலும் மூன்று உடல்கள் மீட்கப்படும் என்றார்.
சம்பவ இடத்தில் ராணுவம், தேசிய பேரிடா் மீட்புப் படை, மாநில பேரிடா் மீட்புப் படை, காவல் துறை, உள்ளூா் நிா்வாகத்தினா் இணைந்த குழுக்கள் மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளன. அடா் வனம் மற்றும் பனிமூட்டம் காரணமாக இந்தப் பணி சவாலாக உள்ளது.
அருணாசல பிரதேசத்தின் அஞ்சாவ் மாவட்டத்தில் ஹயுலியாங்-சக்லகாம் மலைப் பாதையில் கடந்த திங்கள்கிழமை இரவில் சென்ற லாரி விபத்தில் சிக்கியது. 10,000 அடி உயரத்தில் அமைந்துள்ள இந்த இடம், அடா் வனங்கள் நிறைந்த கரடுமுரடான பகுதி என்பதுடன் போதிய தொலைத்தொடா்பு வசதிகளும் இல்லாததாகும்.
விபத்தில் உயிா்பிழைத்த ஒருவா், எப்படியோ மீண்டு வந்து புதன்கிழமை தகவல் தெரிவித்த பிறகே அதிகாரிகளுக்கு இச்சம்பவம் குறித்து தெரியவந்தது. ஹோட்டல் கட்டுமானப் பணிக்காக, தின்சுகியாவில் இருந்து 22 தொழிலாளா்கள் லாரியில் சென்றபோது விபத்து நேரிட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.