

மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தின் பெயரை மத்திய அரசு மாற்றுவது குறித்து காங்கிரஸ் எம்.பி. ஜெய்ராம் ரமேஷ் கருத்து தெரிவித்துள்ளார்.
'மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்புத் திட்ட'த்தை விரிவுபடுத்தி 'புஜ்ய பாபு ஊரக வேலைவாய்ப்புத் திட்டம்'(Pujya Bapu Rural Employment Scheme) என மத்திய பாஜக அரசு பெயர் மாற்றம் செய்ய திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. இதற்கு காங்கிரஸ் கட்சியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இதுகுறித்து காங்கிரஸ் எம்.பி. ஜெய்ராம் ரமேஷ் பதிலளிக்கையில்,
"திட்டங்களுக்கும் சட்டங்களுக்கும் பெயர் மாற்றுவதில் பிரதமர் மோடியின் அரசு நிபுணத்துவம் பெற்றது. அவர்களை யாராலும் மிஞ்ச முடியாது. அவர்கள் நிர்மல் பாரத் அபியானை, ஸ்வச் பாரத் அபியான் என்றும், கிராமப்புற எல்பிஜி விநியோகத் திட்டத்தை உஜ்வாலா என்றும் பெயர் மாற்றினார்கள்.
அவர்கள் திட்டங்களை வடிவமைப்பதிலும் விளம்பரப்படுத்துவதிலும் பெயர்களை மாற்றுவதிலும் வல்லுநர்கள். ஆச்சரியப்படும் விதமாக, பண்டிட் நேருவை வெறுப்பது போலவே மகாத்மா காந்தியையும் வெறுப்பதாகத் தெரிகிறது. மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டம் 2005 முதல் நடைமுறையில் உள்ளது. இப்போது அதன் பெயரை மாற்றுகிறார்கள். மகாத்மா காந்தி என்ற பெயரில் என்ன தவறு இருக்கிறது?" என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
மேலும் கூட்டத்தொடர் குறித்து பேசிய அவர்,
"நாடாளுமன்றத்தில் சில மசோதாக்கள் அறிமுகப்படுத்தப்படும், சில நிறைவேற்றப்படும் என்று எதிர்பார்க்கிறோம். அணுசக்தி மசோதா, நாடாளுமன்றக் குழுவிற்கு அனுப்பப்படும் என்று எதிர்பார்க்கிறோம். உயர்கல்வி ஆணையத்திற்கான ஒரு மசோதா அறிமுகப்படுத்தப்பட்டது, அதை குழுவிற்கு அனுப்ப வேண்டும் என்று நாங்கள் கோரிக்கை விடுத்துள்ளோம்.
பங்குச் சந்தை தொடர்பான பல்வேறு சட்டங்களை ஒருங்கிணைத்து ஒரு சட்டம் உருவாக்கப்பட்டு வருகிறது, அதையும் குழுவிற்கு அனுப்ப வேண்டும் என்று நாங்கள் கோரியுள்ளோம்.
மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜுவிடம் நான் பேசினேன், இந்த மூன்று முக்கிய மசோதாக்களையும் நிலைக்குழுவிற்கு அனுப்ப வேண்டும் என்று கோரிக்கை விடுத்தேன். எனது கோரிக்கை நியாயமானது என்றும் அதை பரிசீலிப்பதாகவும் அமைச்சர் கூறியுள்ளார்" என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.