

இண்டிகோ தொடர்ந்து 2-வது நாளாக இன்று 2,000-க்கும் மேற்பட்ட விமானங்களை இயக்க உள்ளதாக தகவல் தெரிவித்துள்ளது.
விமானிகளுக்கு அதிக ஓய்வு கொடுக்கும் புதிய விதிகள் கொண்டுவரப்பட்டதன் காரணமாக, விமானிகள் பற்றாக்குறையால் இண்டிகோ விமான சேவை கடுமையாகப் பாதிக்கப்பட்டது.
விமான சேவைகள் படிப்படியாக சரிசெய்யப்பட்டு வருவதாகவும் இண்டிகோ நிறுவனத்திற்கு போதிய அறிவுறுத்தல்களையும் கட்டுப்பாடுகளையும் வழங்கியுள்ளதாகவும் மத்திய விமானப் போக்குவரத்து இயக்குனரகம் தெரிவித்துள்ளது. முதற்கட்டமாக இண்டிகோவில் 5% விமான சேவை குறைக்கப்பட்டது.
இந்நிலையில் டிச. 8 முதல் விமான சேவை படிப்படியாக அதிகரிக்கப்பட்டு வருவதாகவும் கடந்த 5 நாள்கள் விமான சேவை வழக்கம்போல இயக்கப்பட்டதாகவும் இண்டிகோ தகவல் தெரிவித்துள்ளது.
திருத்தப்பட்ட விமான சேவைகளின்படி, நேற்று 2,050 விமானங்கள் இயக்கப்பட்டு வெறும் 2 விமானங்கள் மட்டுமே ரத்து செய்யப்பட்டதாகக் கூறும் இண்டிகோ, ரத்து செய்யப்பட்ட விமானங்களால் பாதிக்கப்பட்ட அனைத்து பயணிகளும் உடனடியாக மாற்று விமானங்களில் பயணிக்க ஏற்பாடு செய்யப்பட்டதாகவும் தொடர்ந்து இன்றும்(டிச. 13) 2,050 விமானங்கள் இயக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுவதாகவும் கூறியுள்ளது.
பெருமளவிலான விமானங்கள் ரத்து செய்யப்படுவதாகப் பரவும் எந்தவொரு தவறான தகவல்களையும் நம்பி பயணிகள் ஏமாற வேண்டாம் என்றும் பயணிகள் எங்கள் மீது வைத்துள்ள நம்பிக்கைக்கு நன்றி என்றும் தெரிவித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.