

லியோனல் மெஸ்ஸி தலைமையிலான ஆர்ஜென்டீனா அணியுடனான நட்புறவு கால்பந்து போட்டியில் தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி மோதும் போட்டியில் மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி கலந்துகொள்ள உள்ளதாக காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவித்தன.
ஆர்ஜென்டீனா கால்பந்து அணியின் கேப்டன் லியோனல் மெஸஸிக்கு உலகம் முழுவதிலும் கோடிக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர். இந்தியா முழுவதும் கிரிக்கெட்டின் வலையின் சிக்கியிருந்தாலும் கால்பந்துக்கென மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே இருக்கிறது.
இந்த நிலையில், இந்தியக் கால்பந்து ரசிகர்களை மகிழ்விக்கும் விதமாக உலகக்கோப்பையை வென்ற ஆர்ஜென்டீனா கால்பந்து அணியின் கேப்டன் லியோனல் மெஸ்ஸி மற்றும் அவரது அணி வீரர்கள் இந்தியாவில் உள்ள பல்வேறு நகரங்களில் ‘கோட் இந்தியா டூர்’ - G.O.A.T. India Tour பயணத்தில் ஈடுபடவுள்ளனர்.
இந்தப் பயணத்தில் தில்லி, மும்பை, கொல்கத்தா, ஹைதராபாத் உள்ளிட்ட இடங்களில் நடைபெறும் நிகழ்ச்சிகளிலும் அவர்கள் கலந்து கொண்டு விளையாடவுள்ளனர்.
இந்த சுற்றுப்பயணம் டிசம்பர் 13 ஆம் தேதி தொடங்கி 15 ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. இந்த நிலையில், டிசம்பர் 13(இன்று) ஹைதராபாத்தில் நடைபெறும் தெலங்கானா அணிக்கு எதிரான நட்புறவு கால்பந்து போட்டியில் மெஸ்ஸி தலைமையிலான ஆர்ஜென்டீனா அணி விளையாடுகிறது.
தெலங்கானா அணியில் முதல்வர் ரேவந்த் ரெட்டி இடம்பெறவுள்ளதையடுத்து, அவர் தினந்தோறும் தீவிர கால்பந்து பயிற்சியில் ஈடுபட்டு வந்த விடியோ சமூக வலைத்தளங்களில் பரவலாகப் பகிரப்பட்டு வந்தது. அந்தவகையில் இந்த இரண்டு அணிகளும் 15-20 நிமிடங்கள் கொண்ட ஒரு நட்புறவுப் போட்டி நடைபெற உள்ளது. போட்டி தொடங்குவதற்கு ஐந்து நிமிடங்களுக்கு முன்பு, கால்பந்து ஆர்வலரான முதல்வர் மற்றும் மெஸ்ஸி ஆகியோர் களத்தில் இணைந்து பந்தை ட்ரிபிள் செய்ய உள்ளனர்.
இந்தப் போட்டியைக் காண ராகுல் காந்தி மாலை 4.30 மணிக்கு சிறப்பு விமானத்தில் ஹைதராபாத் வந்து, மெஸ்ஸி தங்கியிருக்கும் தாஜ் ஃபாலக்னுமா உணவகத்துக்குச் செல்கிறார். கால்பந்து போட்டியைப் பார்த்த பிறகு, இரவு 10.30 மணிக்கு தேசியத் தலைநகருக்குப் புறப்படுகிறார்.
ஆர்ஜிஐ கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும் இந்த நிகழ்விற்காக விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. ரச்சகொண்டா காவல் ஆணையர் சுதீர் பாபு 3,000 காவலர்களைப் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தவுள்ளதாக அவர் தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.