

போதைப்பொருள் தயாரிப்பதைப் போல, நுகர்வோரை, அடிமையாக்குவதற்காக, உணவுப்பொருள்களைத் தயாரிக்கும் உபாயங்களைப் பின்பற்றுவதாக ஓரியோ, கோக-கோலா, கிட்கேட் மீது சான் பிரான்சிஸ்கோ நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டுள்ளது.
இந்தியாவில், மிகப்பெரிய மளிகைக் கடைகளில் இன்றளவிலும் ஓரியோ பிஸ்கெட், கோக-கோலா குளிர்பானம், கிட்கேட் சாக்லெட் போன்றவை அதிகமாக விற்பனையாகி வரும் நிலையில், இந்த உணவுப்பொருள்களுக்கு எதிராக ஒரு நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டிருப்பது கடும் அதிர்ச்சியை அளிக்கிறது.
உணவுப் பொருள்களில் தீவிர-பதப்படுத்தல் காரணமாக, நாட்டில், உடல் பருமன், நீரிழிவு, புற்றுநோய் பாதிப்புகள் அதிகரித்து வரும் நிலையில், இந்த வழக்குப் பதிவு செய்யப்படுவதாகவும் மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதாவது, சான் பிரான்சிஸ்கோ உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கில், புகையிலைத் தொழிலுடன் ஒரு காலத்தில் தொடர்புடையவர்களைப் போலவே, நுகர்வோரை ஈர்ப்பதற்காக உணவுகளை வடிவமைத்தல், தயாரித்தல் மற்றும் விளம்பரங்களின் மூலம் அதனை சாப்பிட ஊக்குவித்தல் போன்ற தந்திங்களை இதுபோன்ற நிறுவனங்கள் பயன்படுத்தி வருவதாகக் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
மேலும், போலியான விளம்பரங்கள் மூலம் ஏமாற்றும் சந்தைப்படுத்தல், மக்களுக்கு தீங்கு விளைவித்து, கலிபோர்னியா சட்டங்களை மீறியதாக பொது நலன் வழக்குத் தொடர்ந்திருக்கும் வழக்குரைஞர் ஒருவர், மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
இதில், ஒன்றல்ல, இரண்டல்ல, சுமார் 10 உணவுத் தயாரிப்பு நிறுவனங்களின் பெயர்களையும் அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த நிறுவனங்கள், மக்களின் சுகாதார பேரழிவை கட்டமைத்து, அதன் மூலம் லாபம் சம்பாதிக்கின்றன. அவர்கள் ஏற்படுத்திய சீரழிவுக்கான பொறுப்பை அவர்கள்தான் ஏற்க வேண்டும் என்றும் மனுவில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
அண்மைக்காலமாக தீவிர-பதப்படுத்தப்பட்ட உணவுகளைச் சாப்பிடுவதால், மக்களுக்கு ஏராளமான நோய்கள் வருவதைத் தொடர்ந்து இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.