

மனித குடியிருப்புகளிலிருந்து சிறுத்தைகளை விரட்டுவதற்காகக் காடுகளில் ஆடுகளை விடுவிப்பது கேலிக்குரியது என்று துணை முதல்வர் அஜித் பவார் தெரிவித்தார்.
இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர்,
மனிதன் வாழும் குடியிருப்புகளைப் பாதுகாப்பதற்காக வனத்துறை அமைச்சர் வழங்கிய ஆலோசனை கேலியாக உள்ளதாக அவர் தெரிவித்தார்.
இரை தேடி மனித குடியிருப்புகளுக்குள் சிறுத்தைகள் நுழைவதைத் தடுக்க, வனத்துறை அதிகாரிகள் காடுகளில் அதிக எண்ணிக்கையில் ஆடுகளை விடுவிக்க வேண்டும் என்று மகாராஷ்டிர வனத்துறை அமைச்சர் கணேஷ் நாயக் பரிந்துரைத்திருந்தார்.
சிறுத்தைகளுக்குப் பதிலாக, இரையாக விடப்படும் ஆடுகளைக் கிராம மக்களே உணவாக எடுத்துக்கொள்வார்கள் என்று அவர் சிரித்துக்கொண்டே கூறினார்.
சிறுத்தை தாக்குதல்களுக்கு 4 பேர் கொல்லப்பட்டா நிலையில், மாநில அரசு ரூ. 1 கோடி (இழப்பீடாக) வழங்க வேண்டும். எனவே, இறப்புகளுக்குப் பிறகு இழப்பீடு வழங்குவதற்குப் பதிலாக, ரூ. 1 கோடி மதிப்புள்ள ஆடுகளைக் காட்டில் விடுங்கள், அதனால் சிறுத்தைகள் மனித வாழ்விடங்களுக்குள் நுழையாது என்று அதிகாரிகளிடம் அமைச்சர் கூறியிருந்தார்.
சிறுத்தைகள் தொடர்பான அதிகரித்து வரும் சம்பவங்களைக் கையாள அரசிடம் திட்டங்கள் குறித்துக் கேட்டபோது, மகாராஷ்டிரத்தின் சில குறிப்பிட்ட பகுதிகளில், குறிப்பாகக் கரும்பு விளையும் பகுதிகளில் சிறுத்தைகள் இனப்பெருக்கம் செய்து வாழ்ந்து வருவதாக பவார் கூறினார்.
அரசு வந்தாரா உயிரியல் பூங்காவிலும் இது குறித்து விசாரித்ததாகவும், அவர்களால் 50 சிறுத்தைகளை மட்டுமே ஏற்றுக்கொள்ள முடியும் என்று தெரிவித்ததாகவும் அவர் கூறினார்.
மகாராஷ்டிராவில் கிட்டத்தட்ட 2,000 சிறுத்தைகள் இருப்பதாகவும், இத்தகைய சூழ்நிலையில், நாம் மற்ற நடவடிக்கைகளைப் பற்றிச் சிந்திக்க வேண்டும். கருத்தடை ஒரு பயனுள்ள விருப்பமாக இருக்கலாம், ஆனால் அதன் தாக்கம் நீண்ட காலத்திற்குப் பிறகே தெரியும், ஏனெனில் கருத்தடை செய்த பிறகும் சிறுத்தைகள் உணவுக்காக வேட்டையாடுவதைத் தொடரும் என்று அவர் கூறினார்.
இந்தச் சிக்கலைத் தீர்க்க, தற்போதுள்ள மீட்பு மையங்களின் திறனை மேம்படுத்தவும், புதிய வசதிகளை அமைக்கவும் அரசுப் பணியாற்றி வருகின்றது. மாநில வனத்துறையின்படி, அகில்யாநகர், புணே மற்றும் நாசிக் மாவட்டங்களில் அதிக எண்ணிக்கையிலான சிறுத்தை தொடர்பான சம்பவங்கள் பதிவாகியுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.