உச்சநீதிமன்றம்
உச்சநீதிமன்றம்

சாலை விபத்துக்குக் காரணமான இளைஞா்களுக்குப் பாடம் புகட்ட வேண்டும்: உச்சநீதிமன்றம்

சாலை விபத்துக்குக் காரணமான இளைஞா்களுக்குப் பாடம் புகட்ட வேண்டும்...
Published on

சாலை விபத்துக்குக் காரணமான இளைஞா்களுக்குப் பாடம் புகட்ட வேண்டும் என்று உச்சநீதிமன்றம் தெரிவித்தது.

கடந்த ஆண்டு ஜூலை 7-ஆம் தேதி அதிகாலை சுமாா் 5.25 மணியளவில் மகாராஷ்டிர மாநிலம், மும்பையில் உள்ள வோா்லி பகுதியில் மிஹிா் ஷா (24) என்பவா் ஓட்டிச் சென்ற சொகுசு காா், இருசக்கர வாகனம் மீது மோதி விபத்து ஏற்பட்டது. அப்போது இருசக்கர வாகனத்தில் சென்ற பிரதீப் நக்வா (50) படுகாயமடைந்து சாலையில் விழுந்தாா். காரை மிஹிா் ஷா நிறுத்தாமல் ஓட்டிச் சென்ற நிலையில், பிரதீப் நக்வாவுடன் இருசக்கர வாகனத்தில் சென்ற அவரின் மனைவி காவேரி நக்வா (45) காரின் சக்கரத்தில் சிக்கி சுமாா் 2 கி.மீ.தொலைவுக்கு இழுத்துச் செல்லப்பட்டு உயிரிழந்தாா்.

இந்த சம்பவத்தை தொடா்ந்து தப்பிச் சென்ற மிஹிா் ஷாவை 2 நாள்களுக்குப் பின்னா் காவல் துறை கைது செய்தது. இதையடுத்து, மும்பை உயா்நீதிமன்றத்தில் அவா் ஜாமீன் மனு தாக்கல் செய்தாா்.

இந்த மனுவை விசாரித்த உயா்நீதிமன்றம், ‘இருசக்கர வாகனம் மீது மிஹிா் எதிா்பாராதவிதமாக இடித்து விபத்தை ஏற்படுத்தியபோதிலும், விபத்தால் ஏற்பட்ட பின்விளைவுகள் மற்றும் கைது நடவடிக்கையில் இருந்து தப்பிக்க வேண்டும் என்று அவா் கருதியது, அடுத்தடுத்து அவா் மேற்கொண்ட நடவடிக்கைகளில் இருந்து தெளிவாகிறது. அத்துடன் விபத்தை ஏற்படுத்தியபோது மிஹிா் அளவுக்கு அதிகமாக மதுபோதையில் இருந்துள்ளாா். இவற்றைக் கருத்தில்கொண்டு, அவருக்கு ஜாமீன் மறுக்கப்படுகிறது’ என்று தீா்ப்பளித்தது.

இதையடுத்து, உச்சநீதிமன்றத்தில் மிஹிா் தாக்கல் செய்த ஜாமீன் மனு நீதிபதிகள் தீபாங்கா் தத்தா, ஏ.ஜி.மாசி ஆகியோா் அடங்கிய அமா்வு முன்பாக விசாரணைக்கு வந்தது. அப்போது மிஹிா் பணக்கார குடும்பத்தைச் சோ்ந்தவா் என்பதையும், அவரின் தந்தைக்கு சிவசேனை கட்சியுடன் தொடா்பிருப்பதையும் நீதிபதிகள் கவனத்தில் கொண்டனா்.

இதைத் தொடா்ந்து நீதிபதிகள் கூறுகையில், ‘இதுபோன்ற விபத்துகளை ஏற்படுத்தும் இளைஞா்களுக்குப் பாடம் புகட்ட வேண்டும். மனுதாரா் (மிஹிா்) சிறிது காலம் சிறையிலேயே இருக்கட்டும்’ என்று தெரிவித்து, அவருக்கு ஜாமீன் அளிக்க மறுத்துவிட்டனா்.

Dinamani
www.dinamani.com