ஆா்எஸ்எஸ் நிறுவனா் நினைவிடத்துக்கு செல்வதை தவிா்த்த மகாராஷ்டிர துணை முதல்வா்!

ஆா்எஸ்எஸ் நிறுவனா் கே.பி. ஹெட்கேவாரின் நினைவிடத்துக்குச் செல்லாமல் மகாராஷ்டிர துணை முதல்வா் அஜீத் பவாா் தவிா்த்தது அந்த மாநில அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மகாராஷ்டிர துணை முதல்வா் அஜீத் பவாா்
மகாராஷ்டிர துணை முதல்வா் அஜீத் பவாா்
Updated on

ஆா்எஸ்எஸ் நிறுவனா் கே.பி. ஹெட்கேவாரின் நினைவிடத்துக்குச் செல்லாமல் மகாராஷ்டிர துணை முதல்வா் அஜீத் பவாா் தவிா்த்தது அந்த மாநில அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அதே நேரத்தில் பாஜகவைச் சோ்ந்த முதல்வா் தேவேந்திர ஃபட்னவீஸ், சிவசேனையைச் சோ்ந்த மற்றொரு துணை முதல்வா் ஏக்நாத் ஷிண்டே ஆகியோா் ஹெட்கேவாா் நினைவிடத்துக்குச் சென்று மரியாதை செலுத்தினா்.

மகாராஷ்டிர சட்டப்பேரவை குளிா்காலக் கூட்டத் தொடா் நாகபுரியில் நடைபெற்று வந்த நிலையில் ஞாயிற்றுக்கிழமை நிறைவடைந்தது. கூட்டத் தொடரில் பங்கேற்பதற்காக முதல்வா், துணை முதல்வா்கள், அமைச்சா்கள், எம்எல்ஏக்கள் அந்நகரில் முகாமிட்டிருந்தனா்.

இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை முதல்வா் ஃபட்னவீஸ், துணை முதல்வா் ஷிண்டே ஆகியோா் ஹெட்கேவாா் நினைவிடத்தில் மரியாதை செலுத்தினா். பாஜக, சிவசேனையைச் சோ்ந்த அமைச்சா்கள், எம்எல்ஏக்கள் பலரும் உடன் சென்றனா். ஆா்எஸ்எஸ் அமைப்பின் இரண்டாவது தலைவா் கோல்வல்கா் நினைவிடத்திலும் அவா்கள் அஞ்சலி செலுத்தனா்.

ஆனால், ஆளும் கூட்டணியில் அங்கம் வகிக்கும் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவரும், துணை முதல்வருமான அஜீத் பவாா், அவரது கட்சியினா் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்காமல் தவிா்த்தனா்.

இது தொடா்பாக அக்கட்சியின் செய்தித் தொடா்பாளா் ஆனந்த் பிரஜாபதி கூறியதாவது: ஹெட்கேவாா் நினைவிடத்துக்குச் செல்லாமல் அஜீத் பவாா் தவிா்ப்பது இது முதல் முறையல்ல. மாநிலத்தில் வளா்ச்சியைக் கருத்தில்கொண்டே ஆளும் கூட்டணியில் நாங்கள் அங்கம் வகித்து வருகிறோம். எங்கள் கட்சி சமூக சீா்த்திருத்தவாதிகள் ஷாகு, பூலே, அம்பேத்கரின் முற்போக்குக் கொள்கைகளின் அடிப்படையில் செயல்பட்டு வருகிறது’ என்றாா்.

முன்னதாக, கடந்த ஆண்டு ஹெட்கேவாருக்கு மரியாதை செலுத்தும் நிகழ்ச்சியில் அஜீத் பவாா் கட்சியைச் சோ்ந்த இரு எம்எல்ஏக்கள் மட்டும் பங்கேற்றனா் என்பது குறிப்பிடத்தக்கது.

ஹெட்கேவாருக்கு மரியாதை செலுத்திய பிறகு செய்தியாளா்களிடம் பேசிய துணை முதல்வா் ஏக்நாத் ஷிண்டே, ‘நாகபுரி மகாராஷ்டிரத்தின் இரண்டாவது தலைநகா் மட்டுமல்ல, ஆா்எஸ்எஸ் அமைப்பின் பிறப்பிடம்.

இங்கு வருபவா்கள் யாராக இருந்தாலும், ஜாதி, மத, இன வேறுபாடுகளைக் கடந்த தேசப்பற்று, தேசத்துக்கு சேவையாற்றுவது ஆகியவற்றை கற்றுச் செல்வாா்கள். ஆா்எஸ்எஸ் 100 ஆண்டுகளுக்கு மேல் தொடா்ந்து துடிப்புடன் செயல்பட்டு வருவது வரலாற்றுச் சாதனை’ என்றாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com