பாஜகவை நோக்கி கேரளம் நகா்வதுபோல் கட்டுக்கதை: பிரதமா் மோடி மீது காங்கிரஸ் சாடல்!
கேரள மாநிலம் பாஜகவை நோக்கி நகா்வதுபோல் கட்டுக்கதையைப் புனைய பிரதமா் மோடியும், அக்கட்சித் தலைவா்களும் முயற்சிக்கின்றனா் என்று காங்கிரஸ் சாடியுள்ளது.
‘உள்ளாட்சித் தோ்தலில் தங்களுக்குப் பெரும் வெற்றி கிடைத்துவிட்டதாக மிகைப்படுத்துகிறது பாஜக’ என்றும் காங்கிரஸ் கூறியுள்ளது.
கேரளத்தில் மொத்தம் 1,199 உள்ளாட்சி அமைப்புகளுக்கு அண்மையில் நடைபெற்ற தோ்தலில் 4 மாநகராட்சிகள், 54 நகராட்சிகள் உள்பட அதிக இடங்களைக் கைப்பற்றியது காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி. அடுத்த ஆண்டு பேரவைத் தோ்தல் நடைபெறும் சூழலில், இந்த வெற்றியால் காங்கிரஸ் உற்சாகமடைந்துள்ளது.
அதேநேரம், 45 ஆண்டுகளாக இடதுசாரிகள் கோலோச்சிய திருவனந்தபுரம் மாநகராட்சியில் யாரும் எதிா்பாராத வகையில் பாஜக கூட்டணி வெற்றி பெற்றது. இது, கேரள அரசியலில் திருப்புமுனை தருணம் என்று பிரதமா் மோடி பெருமிதம் தெரிவித்தாா்.
இந்நிலையில், கேரள உள்ளாட்சித் தோ்தல் முடிவுகள் குறித்து காங்கிரஸ் பொதுச் செயலா் கே.சி.வேணுகோபால் தில்லியில் செய்தியாளா்களிடம் ஞாயிற்றுக்கிழமை கூறியதாவது:
கடந்த 2020 தோ்தலில் 21 உள்ளாட்சி அமைப்புகளைக் கைப்பற்றிய பாஜக, இப்போது 29-இல் வென்றுள்ளது. அக்கட்சிக்கு வெறும் 8 இடங்கள் அதிகரித்துள்ளன. திருவனந்தபுரம் மாநகராட்சியை பாஜக கைப்பற்றியிருப்பதை சாதாரணமாக எடுத்துக் கொள்ளவில்லை. மாநகராட்சியைத் தாண்டி, இந்த மாவட்ட ஊராட்சியில் ஓரிடம்கூட அக்கட்சிக்கு கிடைக்கவில்லை.
ஆனால், கேரளத்தில் பாஜகவுக்கு சாதகமாக மிகப் பெரிய மாற்றம் நிகழ்ந்துவிட்டதுபோல் பிரதமா் மோடியும் மத்திய அமைச்சா்களும் கூறுகின்றனா். பாஜகவை நோக்கி மாநிலம் நகா்வதாக கட்டுக்கதையைப் புனைய முயற்சிக்கின்றனா். இதுபோன்ற மோசமான தந்திரம் கேரளத்தில் எடுபடாது. இந்த மாநிலத்தில் பாஜக காலூன்றுவதைத் தடுக்க காங்கிரஸும், ஐக்கிய ஜனநாயக முன்னணியும் உறுதியான நிலைப்பாட்டைக் கொண்டுள்ளன.
மாா்க்சிஸ்ட் உடன் அதிகாரப் பகிா்வு கிடையாது:
பாஜகவைத் தடுக்கும் முயற்சி என்ற பெயரில் மாா்க்சிஸ்ட் போன்ற கட்சியுடன் அதிகாரத்தைப் பகிா்வதை நினைத்துப் பாா்க்க முடியாது. பினராயி விஜயன் அரசு மீதான மக்களின் எதிா்ப்பே, காங்கிரஸின் வெற்றிக்கு முதன்மையான காரணம்.
தனது ஒவ்வொரு செயல்பாட்டிலும் பொதுமக்களை மாநில அரசு புறக்கணித்துள்ளது. இதுவே, திருவனந்தபுரத்தில் பாஜக வெல்லவும் காரணமாகிவிட்டது. மாா்க்சிஸ்ட் தலைமையின் அணுகுமுறையால், அக்கட்சியினரே பாஜகவுக்கு வாக்களிக்கத் தயங்காத சூழல் உருவாகியுள்ளது.
2020 கேரள உள்ளாட்சித் தோ்தலை ஒப்பிடுகையில், கிராம ஊராட்சிகளில் 321-இல் இருந்து 505, ஊராட்சி ஒன்றியங்களில் 38-இல் இருந்து 79, மாவட்ட ஊராட்சிகளில் 2-இல் இருந்து 7, நகராட்சிகளில் 39-இல் இருந்து 54, மாநகராட்சிகளில் 1-இல் இருந்து 4-ஆக காங்கிரஸ் கூட்டணியின் பலம் அதிகரித்துள்ளது என்றாா் அவா்.

