

நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் பாஜக எம்பிக்கள் அமளியில் ஈடுபட்டதால், பகல் 12 மணி வரை அவை நடவடிக்கைகள் ஒத்திவைக்கப்பட்டன.
தில்லி ராம்லீலா மைதானத்தில் காங்கிரஸ் சார்பில் 'வாக்குத் திருட்டு’க்கு எதிராக ஞாயிற்றுக்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, கட்சியின் நாடாளுமன்ற குழுத் தலைவர் சோனியா காந்தி, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
பிரதமர் நரேந்திர மோடி மற்றும் மத்திய அரசுக்கு எதிராக ‘வாக்குத் திருடர்களே, அரியணையைவிட்டு வெளி யேறுங்கள்' என்ற பிரதான முழக்கம் முன்வைக்கப்பட்டது.
இந்த நிலையில், நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடரின் கடைசி வாரத்தின் முதல் நாள் அமர்வு இரு அவைகளிலும் இன்று காலை கூடின.
அப்போது, பிரதமர் நரேந்திர மோடி குறித்த அவதூறு கருத்துகளுக்கு காங்கிரஸ் மன்னிப்புக் கேட்க வேண்டும் என்று பாஜக எம்பிக்கள் இரு அவைகளிலும் அமளியில் ஈடுபட்டனர்.
மாநிலங்களவையில் பேசிய மத்திய அமைச்சர் ஜெ.பி.நட்டா, “காங்கிரஸ் ஆர்ப்பாட்டத்தில் பிரதமர் மோடிக்கு எதிராக முழக்கங்கள் எழுப்பப்பட்டன. இது காங்கிரஸ் கட்சியின் சிந்தனையையும் மனநிலையையும் காட்டுகிறது. ஒரு பிரதமருக்கு எதிராக இதுபோன்று பேசுவது கண்டிக்கத்தக்கது. இதற்காக சோனியா காந்தி, நாட்டு மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும்.” எனத் தெரிவித்தார்.
இரு அவைகளிலும் தொடர்ந்து கூச்சல், குழப்பங்கள் நீடித்ததால் அவை நடவடிக்கைகள் பகல் 12 மணி வரை ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.
இதையடுத்து பகல் 12 மணிக்கு தொடங்கிய மக்களவைக் கூட்டத்தில், எஸ்ஐஆர் தொடர்பான விவாதத்தில் காங்கிரஸ் தலைவர்கள் குறித்து உள்துறை அமைச்சர் அமித் ஷா பேசிய கருத்துக்கு அவர் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டனர்.
தொடர்ந்து, மக்களவை பிற்பகல் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.