

மும்பை: மகாராஷ்டிர மாநிலம் லத்துரில் வங்கி ஊழியர் ஒருவர், காரில் லிஃப்ட் கேட்டு வந்தவரை எரித்துக் கொன்றுவிட்டு, தானே மரணமடைந்துவிட்டது போல நாடகமாடிய நிலையில், பெண் தோழிக்கு அனுப்பிய தகவலால் சிக்கியிருக்கிறார்.
விரைந்து சென்ற காவல்துறையினர், எரிந்த காரில் இருந்த உடலை மீட்டு உடல் கூராய்வுக்காக அனுப்பினர். பிறகு, கார் பற்றி விசாரணை நடந்த போது, வங்கியின் நிதி வசூல் ஊழியர் கணேஷ் சவனுக்குச் சொந்தமான கார் அது என்பது தெரிய வந்தது.
உடனடியாக அவரது தகவல்களைத் திரட்டி, அவரது உறவினருக்குப் போன் செய்தபோது, கணேஷ் சவன் வேலைக்குச் சென்று வீடு திரும்பவில்லை, அவரது செல்போனும் சுவிட்ச் ஆஃப் செய்யப்பட்டுள்ளதால் கவலையில் இருப்பதாக குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.
இதன் அடிப்படையில், காரில் எரிந்த நிலையில் இருந்தது கணேஷ் என்று காவல்துறையினர் கருதினர். ஆனால் இது குறித்து நடந்த விசாரணையில் உண்மை வெளிச்சத்துக்கு வந்தது.
திங்களன்று நடைபெற்ற விசாரணையின்போது, பல திடுக்கிடும் தகவல்கள் கிடைத்தன. சவானுக்கு ஒரு பெண்ணுடன் தொடர்பு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
அப்போது, அப்பெண்ணிடம் காவல்துறையினர் விசாரணை நடத்திய போதுதான், சவான், சம்பவத்துக்குப் பிறகு, வேறோரு செல்போன் எண்ணிலிருந்து அப்பெண்ணுக்கு மெசேஜ் அனுப்பிக்கொண்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதன் மூலம், இறந்ததாகக் கருதப்பட்டவர் உயிரோடு இருப்பது உறுதி செய்யப்பட்டது. ஆனால், இறந்தவர் யார் என்ற கேள்விக்கு காவல்துறைக்கு எழுந்தது. அப்போது, அப்பெண்ணுடன் தொடர்புகொண்ட செல்போனை காவல்துறை கண்காணிக்கத் தொடங்கியது. அதில், சவான் கோல்ஹாபூர் சென்று அங்கிருந்து விஜய்துர்க் பகுதிக்குச் சென்றது கண்டுபிடிக்கப்பட்டு அவர் கைது செய்யப்பட்டார்.
அவரிடம் நடத்திய விசாரணையில், சவான் ரூ.1 கோடிக்கு ஆயுள் காப்பீடு செய்திருக்கிறார். அந்தத் தொகையை எடுத்து வீட்டுக் கடனை அடைக்க முடிவு செய்து, சொந்த மரணத்தை திட்டமிட்டுள்ளார்.
சனிக்கிழமை, கோவிந்த் யாதவ் என்ற நபர் வாகனத்தில் லிஃப்ட் கேட்டுள்ளார். அவரை சவான் ஏற்றிச் சென்றிருக்கிறார். அப்போது கோவிந்த் மதுபோதையில் இருந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
காரை வனப்பகுதிக்கு ஓட்டிச் சென்று வாங்கி வந்த உணவை இருவரும் சாப்பிட்டிருக்கிறார்கள். அப்போது யாதவ் உறங்கிவிட, சவான், அவரை ஓட்டுநர் இருக்கைக்கு மாற்றி, சீட் பெல்ட் போட்டு, காருக்கு தீ வைத்திருக்கிறார். யாதவ் கையில், சவான் தன்னுடைய கைச் சங்கிலி போன்றவற்றையும் போட்டு, தன்னுடைய குடும்பத்தை நம்ப வைக்கவும் முயன்றிருக்கிறார்.
இந்த நிலையில், சாவன் மீது கொலை வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.