தொடர் சர்ச்சையில் நிதீஷ்! மனநலன் குறித்து கேள்வி எழுப்பும் எதிர்க்கட்சிகள்!!

தொடர் சர்ச்சையில் சிக்கும் நிதீஷ் குமாருக்கு எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்திருப்பது பற்றி...
தொடர் சர்ச்சையில் நிதீஷ்
தொடர் சர்ச்சையில் நிதீஷ்
Updated on
2 min read

தொடர் சர்ச்சையில் சிக்கிவரும் பிகார் முதல்வர் நிதீஷ் குமாரின் மனநலன் குறித்து எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பியுள்ளன.

பிகார் தலைமைச் செயலகத்தில் அரசு மருத்துவர்களுக்கு நேற்று பணி நியமன ஆணை வழங்கும் நிகழ்வில், பெண் மருத்துவரின் ஹிஜாப்பை முதல்வர் நிதீஷ் குமார் அகற்றியது பெரும் சர்ச்சையாகியுள்ளது.

இந்த செயலுக்கு கண்டனம் தெரிவித்து வரும் எதிர்க்கட்சித் தலைவர்கள், கடந்த சில மாதங்களில் சர்ச்சைக்குள்ளான நிதீஷ் குமாரின் பிற செயல்பாடுகளையும் குறிப்பிட்டு வருகின்றனர்.

பாட்னாவில் கடந்த மே மாதம் நடைபெற்ற அரசு விழா ஒன்றில் பங்கேற்ற நிதீஷ் குமார், மூத்த ஐஏஎஸ் அதிகாரியான பிகார் கூடுதல் தலைமைச் செயலர் சித்தார்த்தின் தலையில் பூத் தொட்டி வைத்தது சர்ச்சையானது.

மேலும், பிகார் சட்டப்பேரவைத் தேர்தலின்போது பாஜக வேட்பாளர் ரமா நிஷாத்தை ஆதரித்து பிரசாரம் செய்த நிதீஷ் குமார், அவரது கையில் மாலை கொடுப்பதற்கு பதிலாக கழுத்தில் போடச் சென்றார். அப்போது, ஜனதா தளத்தின் மூத்த தலைவர் சஞ்சய் ஜா தடுக்க முயற்சித்தார்.

இந்த மூன்று நிகழ்வுகளுக்குப் பின்னரும், பிகார் எதிர்க்கட்சித் தலைவரான தேஜஸ்வி யாதவ் எழுப்பிய கேள்விகள், நிதீஷ் குமாரின் மனநலன் நிலையாக உள்ளதா?, மாநிலத்தை தொடர்ந்து வழிநடத்த முடியுமா? என்பதாகும்.

அரசியல் கட்சிகள், தலைவர்களின் கண்டனங்கள்

ராஷ்டீரிய ஜனதா தளம்

”நிதீஷ் குமாருக்கு என்ன ஆனது?. அவரது மனநிலை இப்போது முற்றிலும் பரிதாபகரமான நிலையை அடைந்துவிட்டதா? அல்லது 100% சங்கியாகிவிட்டாரா?”

காங்கிரஸ்

“இவர்தான் பிகார் முதலமைச்சர் நிதீஷ் குமார். இவரின் வெட்கக் கேடான செயலைப் பாருங்கள்.

ஒரு பெண் மருத்துவர் தனது பணி நியமனக் கடிதத்தைப் பெற வந்தபோது, ​​நிதீஷ் குமார் அவரது ஹிஜாப்பை இழுத்துள்ளார்.

பிகாரின் மிக உயர்ந்த பதவியில் இருக்கும் ஒருவர், பொது இடத்தில் இப்படிப்பட்ட இழிவான செயலைச் செய்கிறார். யோசித்துப் பாருங்கள், அந்த மாநிலத்தில் பெண்களுக்கு எவ்வளவு பாதுகாப்பு இருக்கும்?.

இந்த இழிவான செயலுக்காக நிதீஷ் குமார் உடனடியாகப் பதவி விலக வேண்டும். இந்த இழிவான மனப்பான்மை மன்னிக்க முடியாதது.” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

அகிலேஷ் யாதவ்

சமாஜவாதி தலைவர் அகிலேஷ் யாதவ், “இது வெட்கக்கேடானது, அவருக்குச் சரியாக ஆலோசனை வழங்கும் ஒரு ஆலோசகர் தேவை.” எனத் தெரிவித்துள்ளார்.

மெஹபூபா முஃப்தி

ஜம்மு - காஷ்மீரின் முன்னாள் முதல்வரும் மக்கள் ஜனநாயகக் கட்சியின் தலைவருமான மெஹபூபா முஃப்தி தெரிவித்ததாவது:

“நிதீஷ் குமாரை தனிப்பட்ட முறையில் அறிந்தவராகவும், அவரைப் போற்றியவராகவும் இருந்த நான், ஒரு இளம் முஸ்லிம் பெண்ணின் ஹிஜாப்பை விலக்கியதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தேன். இதை அவரது முதுமையின் காரணமாகக் கருதுவதா அல்லது முஸ்லிம்களைப் பொதுவெளியில் அவமானப்படுத்துவது சாதாரணமாகிவிட்டதன் விளைவு என்று கருதுவதா?

அவரைச் சுற்றி மேடையில் இருந்தவர்கள் இந்த சம்பவத்தை ஒருவித பொழுதுபோக்காகப் பார்த்து சிரித்தது இன்னும் அதிக வருத்தமளிக்கிறது. ஒருவேளை நிதீஷ் பதவியில் இருந்து விலக வேண்டிய நேரம் இதுவாக இருக்கலாம்” எனத் தெரிவித்துள்ளார்.

Summary

Nitish in continuous controversy: Opposition parties raise questions about his mental health!!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com