

பிகாரில் பணி நியமன ஆணை வழங்கும் நிகழ்வில், பெண் மருத்துவரின் ஹிஜாப்பை அவரது அனுமதியின்றி விலக்கிய முதல்வர் நிதீஷ் குமாரின் செயலுக்கு கண்டனம் எழுந்துள்ளது.
பாட்னாவில் உள்ள பிகார் தலைமைச் செயலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற விழாவில் 1,283 ஆயுஷ் மருத்துவர்களுக்கு பணிநியமன ஆணைகளை முதல்வர் நிதீஷ் குமார் வழங்கினார். அப்போது, துணை முதலமைச்சர்கள் சாம்ராட் சௌத்ரி, விஜய் குமார் சின்ஹா உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
1,283 மருத்துவர்களுக்கு பணிநியமன ஆணைகள் வழங்குவதன் அடையாளமாக 10 மருத்துவர்களுக்கு முதல்வர் நிதீஷ் குமார் நேரடியாக ஆணைகளை வழங்கினார்.
அப்போது, ஹிஜாப் அணிந்து பணி நியமன ஆணையைப் பெற வந்த பெண் மருத்துவரை பார்த்து, முதலில் ஹிஜாப்பை விலக்குமாறு நிதீஷ் செய்கை செய்கிறார். பின்னர், பெண் மருத்துவரின் அனுமதியின்றி நிதீஷ் குமாரே ஹிஜாப்பை விலக்கினார்.
இந்த காணொலி இணையத்தில் வைரலாகப் பரவிய நிலையில், ராஷ்டீரிய ஜனதா தளம், காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளன.
காங்கிரஸின் அதிகாரப்பூர்வ எக்ஸ் பக்கத்தில் வெளியிடப்பட்ட கண்டன பதிவில் தெரிவித்திருப்பதாவது:
“இவர்தான் பிகார் முதலமைச்சர் நிதீஷ் குமார். இவரின் வெட்கக் கேடான செயலைப் பாருங்கள்.
ஒரு பெண் மருத்துவர் தனது பணி நியமனக் கடிதத்தைப் பெற வந்தபோது, நிதீஷ் குமார் அவரது ஹிஜாப்பை இழுத்துள்ளார்.
பிகாரின் மிக உயர்ந்த பதவியில் இருக்கும் ஒருவர், பொது இடத்தில் இப்படிப்பட்ட இழிவான செயலைச் செய்கிறார். யோசித்துப் பாருங்கள், அந்த மாநிலத்தில் பெண்களுக்கு எவ்வளவு பாதுகாப்பு இருக்கும்?.
இந்த இழிவான செயலுக்காக நிதீஷ் குமார் உடனடியாகப் பதவி விலக வேண்டும். இந்த இழிவான மனப்பான்மை மன்னிக்க முடியாதது.” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
பிகார் எதிர்க்கட்சியான ராஷ்டீரிய ஜனதா தளம் வெளியிட்டிருக்கும் கண்டன பதிவில், “நிதீஷுக்கு என்ன ஆனது? அவருடைய மனநிலை இப்போது முற்றிலும் பரிதாபகரமான நிலையை அடைந்துவிட்டதா? அல்லது 100 சதவீதம் சங்கியாகிவிட்டாரா?” எனக் கேள்வி எழுப்பியுள்ளது.
ஏற்கெனவே, கடந்த மே மாதம் நடைபெற்ற அரசு விழாவில், ஐஏஎஸ் அதிகாரியை மேடைக்கு வரவழைத்த நிதீஷ் குமார், அவரின் தலையில் பூத் தொட்டியை வைத்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.