

எல்லை ஊடுருவல்: 2025 ஆண்டில் மட்டும் இந்தியா - வங்கதேச எல்லையில் ஊடுருவ முயன்றதாக 2,500 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. மேலும், 1100 முறை ஊடுருவ முயற்சி நடந்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளது.
நாடாளுமன்றத்தில் குளிர்கால கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. இதில், மக்களவையில், நாட்டின் எல்லைப் பகுதிகளான சீனா, வங்கதேசம், பாகிஸ்தான், நேபாளம் வழியாக இதுவரை இந்தியாவிற்குள் ஊடுருவியவர்களின் விவரங்கள் குறித்த புள்ளி விவரங்களை அமைச்சர் நித்யானந்த் ராய் எழுத்துப்பூர்வமாக தாக்கல் செய்தார்.
அதில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, 2025 ஜனவரி - நவம்பர் வரையிலான காலகட்டத்தில் மட்டும் இந்தியா - வங்கதேச எல்லை வழியாக ஊடுருவ முயன்றதாக இதுவரை 2,556 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதுவரை 1,104 முறை ஊடுருவ முயற்சி நடந்துள்ளது.
வங்கதேசம் உடனான எல்லையில் 79.08% வேலி அமைக்கப்பட்டுள்ளதாகவும், பாகிஸ்தான் உடனான எல்லையில் 93.25% வேலி கட்டப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2014 ஆம் ஆண்டு முதல் இந்திய எல்லைகளில் 8,500 முறை ஊடுருவல் முயற்சி நடந்துள்ளது. இதில் 20,800 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறிப்பாக 4,096.70 கி.மீ. நீளம் கொண்ட இந்தியா - வங்கதேச எல்லையில் மட்டும் 2014 முதல் 2024 வரையிலாக காலகட்டத்தில் 7,500 முறை ஊடுருவல் முயற்சிகள் நடந்துள்ளதாகவும், 18,800 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியா - பாகிஸ்தான் இடையே 2,289.66 கி.மீ. எல்லை பகிரப்பட்டுள்ளது. இப்பகுதிகளில் 2014 முதல் 420 முறை ஊடுருவல் முயற்சிகள் நடந்துள்ளது. இதில் 560 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
1,643 கி.மீ. தூரம் உடைய இந்தியா - மியான்மர் எல்லையில் 290 முறை ஊடுருவல் முயற்சிகள் நடந்துள்ளன. 1,150 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிக்க | ராஜஸ்தானில் வரைவு வாக்காளா் பட்டியல் வெளியீடு: 42 லட்சம் பேர் நீக்கம்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.